மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவு பகுதியில் இன்று அதிகாலை சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டு வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தினை பொலிஸார் முற்றுகையிட்டதில் இருவர் கைது செய்துள்ளனர்.
இதன்போது கசிப்பு கொள்கலன்களும், சில பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிதெரிவித்தார்.
வவுணதீவு பிரதேசத்திலுள்ள புதுமண்டபத்தடி கிராம சேவகர் பிரிவிலுள்ள நொச்சண்டகல் காட்டுப் பகுதியில் பொலிஸாரால் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது 52 போத்தல் கசிப்புடன், கொள்கலன்கள், பரல் உள்ளிட்ட கசிப்பு உற்பத்தி செய்யும் பொருட்களுடன் சந்தேகத்தின் பேரில் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் இந் நடவடிக்கை இன்று அதிகாலை 2 மணியளவில்மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரையும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளதாகவும் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.