கடந்த இரண்டு வருடகாலமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ்வரும் அமைச்சின் ஊடான அபிவிருத்தி கருத்திட்ட பணிப்பாளராக கடமையாற்றிய ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபாகணேசன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து பிரபா கணேசன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
நான் கடந்த இரண்டுவருடகாலமாக ஜனாதிபதியின் வன்னி மாவட்ட கருத்திட்ட பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தேன். உண்மையிலே இது ஒரு அரசியல் நியமனமேயாகும். இந்த பதவியின் ஊடாக பாரிய அளவில் மக்களுக்கான சேவையினை ஆற்றக்கூடியதாக எவ்விதமான நிதி ஒதுக்கீடுகளும் சரியான முறையிலே வழங்கப்படவில்லை.
இருப்பினும் கடந்த ஆண்டு நான் கொடுத்த பல வேலைத் திட்டங்களில் ஒரு சில வேலைத் திட்டங்களே நடைமுறைப்படுத்தப்பட்டன. இது சம்பந்தமாக கடந்த ஆண்டு இறுதியில் இடம் பெற்ற பணிப்பாளர்கள் கூட்டத்தில் எனது அதிருப்தியை தெரிவித்த பொழுது 2019ஆம் ஆண்டு பாரிய அளவில் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படும் என்ற உத்தரவாதம் மேலதிக செயலாளரின் ஊடாக எனக்கு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த வருட ஆரம்பத்தில் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்ட ஒவ்வொரு பிரதேச செயலகங்களின் ஊடான கிராம தலைவர்களின் சந்திப்பை ஏற்படுத்தி அதன் ஊடாக பல கோடி ரூபாய்களுக்கான வேலைத் திட்டங்களைப் பெற்றுக் கொண்டேன். குறிப்பாக வன்னி மாவட்டத்தில் நிலவிவரும் சிறுநீரக நோயினைக் கட்டுப்படுத்தக் கூடிய சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தாங்கிகள் அமைப்பதற்கான வேலைத் திட்டங்களை உள்வாங்கினேன்.
இவ் வேலைத்திட்டங்களை ஜனாதிபதியின் செயலகத்திற்கு அனுப்பியபோது எவ்வாறான கவனமும் எடுக்கப்படாததை நான் அறிந்தேன்.
இது சம்பந்தமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி தயாசேகரவிடம் முறையிட்டபோது எனது செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் முறைப்பாடு செய்ததாகவும் நான் எனது கட்சியான ஜனநாய கமக்கள் காங்கிரஸையே வன்னிமாவட்டத்தில் வளர்த்தெடுப்பதாகவும் ஜனாதிபதி சம்பந்தமான எந்தவொரு விடயத்தையும் மக்களிடம் கொண்டு செல்வதில்லை எனவும் குற்றம் சுமத்தியதாக தெரிவித்தார்.
அதேபோல் நான் வன்னி மாவட்ட மக்களின் தேவைக்கென கொடுத்த அனைத்துவேலைத் திட்டங்களும் இடை நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மக்களிடம் ஜனாதிபதியைப் பற்றி தெரிவிப்பதற்கு ஜனாதிபதி எவ்விதமான சேவையினையும் வன்னி மாவட்ட மக்களுக்கு செய்யவில்லை. மாறாக நாட்டின் அரசியல் குழப்பங்களுக்கே காரணமாக இருந்திருக்கின்றார். இருப்பினும் வன்னி மாவட்ட மக்களின் சேவையினை முன்னெடுப்பதற்காகவே நான் பொறுமையுடன் செயல்பட்டேன்.
வன்னி மாவட்டத்தில் எனது கட்சியின் வளர்ச்சியை பார்த்து பயந்து போன தமிழ் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்ற மஸ்தான் இதன் ஊடாக வன்னிமாவட்ட தமிழ் மக்களுக்கு நான் செய்து கொண்டிருக்கும் சேவையினை இடைநிறுத்த முயற்சிக்கின்றார். வன்னி மாவட்டத்தில் 85 வீதமானவர்கள் தமிழ் மக்களே. நான் எனது சொந்த நிதியின் ஊடாகவே அதி கூடியமக்கள் தேவைகளை நிறை வேற்றிக் கொடுத்திருக்கின்றேன்.
ஜனாதிபதியின் பணிப்பாளர் என்ற முறையில் அனைத்து கிராம மட்டங்களில் உள்ள தலைவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு இந்த பதவி எனக்கு பிரயோஜனமாக இருந்துள்ளது. எமது கட்சியின் வளர்ச்சியும் வன்னி மாவட்ட மக்கள் எனக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் அமோக ஆதரவும் இம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினருக்கும், அமைச்சர் ஒருவருக்கும் இனி ஒரு போதும் தமிழ் வாக்குகளைப் பெற முடியாது என்று தெரியவந்துள்ளது.
அதே போல் இன்று வன்னி மாவட்டத்தில் எந்த மான முள்ள தமிழனும் எதிர்காலத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் வாக்களிக்கப் போவதில்லை என்பதில் திடமாக இருக் கின்றார்கள் என்பதுதெளிவாக உள்ளது என்றார்.