தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கையான ஆயிரம் ரூபாய்க்கு தனது அமைச்சு பதவி தடையாக இருக்குமானால் மக்களுக்காக பதவியை துறக்கவும் தான் தயாராக இருப்பதாக, மலைநாட்டு, புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் சூளுரைத்துள்ளார்.
வாயை திறந்தால் பொய்யான வாக்குறுதியும், கண்ணை திறந்து கொண்டிருக்கும் போது பகல் கொள்ளையும் செய்து வரும் தரப்பினர், தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பளக் கோரிக்கைக்கு தாங்கள் தடை ஏற்படுத்தி வருவதாக பொய்யான பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் திகாம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
ஹட்டன் போடைஸ் தோட்டத்தில் கோணாகலை பிரிவில் சிறுவர் பராமரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நேற்று அமைச்சர் பழனி திகாம்பரத்தின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி என பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் பழனி திகாம்பரம், தோட்டத் தொழிலாளர்கள் தமக்கு நாளாந்த சம்பளமாக முன்னிலையில் உரையாற்றிய ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டம் நடத்திவருவது தொடர்பிலும், 730 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்க தொழிற்சங்கங்களும், முதலாளிமார் சம்மேளனமும் இணக்கம் வெளியிட்டுள்ளது குறித்தும் கருத்துக்களை வெளியிட்டார்.
தற்பொழுதுள்ள விலைவாசிக்கு 1000 ரூபா போதாது எனக் குறிப்பிட்ட அமைச்ர் திகாம்பரம், அமைச்சராக இருந்து தோட்ட உரிமையாளர்களுக்காக வால் பிடிக்கப் போவதில்லை என்றும் உறுதியளித்தார்.