தற்போதைய தேசிய அரசாங்கம் குறுகிய காலத்திற்குள் மக்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தென்பகுதி பிரதேசமான மாத்தறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போதே அமைச்சர் இந்தத் தகவலைக் கூறியிருக்கின்றார்.
வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீரவின் தேர்தல் தொகுதியான மாத்தறையில் நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த மக்கள் சந்திப்பில் மேலும் கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர், இனம், மதம், மொழி, சாதி என்ற எந்தவித பிளவுகளும் இன்றி அனைவரும் பிரஜைகள் என்ற ஒரே எண்ணத்தை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தற்போதைய தேசிய அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நடவடிக்கைகள் ஊடாக நாட்டை முன்னோக்கி கொண்டுசென்று, உலகில் பொருளாதாரத்தில் அபிவிருத்தி அடைந்த நாடாக கட்டியெழுப்புவதே பிரதான நோக்கம் என்றும் கூறியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரமோ, வெளி தலையீடுகளோ இன்றி நாட்டின் பிரச்சனைகளை தீர்த்துக்கொண்டு முன்னோக்கி நகர வேண்டும் என்றும் அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.