அமெரிக்காவில் சூறாவளி தாக்கியதில் 6 பேர் சாவு

324 0

அமெரிக்காவில் சூறாவளி தாக்கியதில் 6 பேர் உயிரிழந்தனர்.அமெரிக்காவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஓக்லஹோமா மாகாணம் தொடர் இயற்கை சீற்றங்களால் உருக்குலைந்து போய் உள்ளது. அங்கு கடந்த சில நாட்களில் மட்டும் பல முறை புயல், சூறாவளி தாக்கி உள்ளது. மேலும் புயல், சூறாவளி காரணமாக தொடர் கனமழை கொட்டித்தீர்த்ததால் அங்குள்ள பல்வேறு நகரங்கள் வெள்ளாக்காடாகி உள்ளன.

இந்த நிலையில், ஓக்லஹோமா மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு மற்றொரு சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியது. இதில் அங்குள்ள எல் ரெனோ, மாயிஸ், பியானே மற்றும் ஸ்டீபன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின.

வீடுகள் உள்ளிட்ட ஏராளமான கட்டிடங்கள் இடிந்து, விழுந்து தரைமட்டமாகின. சாலைகள் பலத்த சேதம் அடைந்தன. மின் இணைப்பு மற்றும் தகவல் தொடர்பு உள்ளிட்டவையும் துண்டிக்கப்பட்டன. சூறாவளி தாக்கியதில் ஒரு பெண் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 29 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிப்புக்குள்ளான பகுதிகளில் முழுவீச்சில் மீட்புபணிகள் நடந்து வருகின்றன.