ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது ஒரு சவால்- தலைமை தேர்தல் அதிகாரி கருத்து

388 0

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது ஒரு சவால் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், இந்த தேர்தல் பணிகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த தேர்தலை சிறப்பாக நடத்தியதற்கு, தேர்தல் பணியாற்றிய அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் அளித்த பயிற்சி ஒரு காரணமாக இருந்தது. நாங்கள் அளித்த பயிற்சி, கீழ்நிலை பணியாளர்கள் வரை சென்று, தேர்தலை நல்லபடியாக நடத்த உதவியது. பயிற்சிக்கு மேல் பயிற்சி அளித்தால் எந்தத் தவறும் இல்லாமல் தேர்தலை நடத்திவிட முடியும் என்பதுதான் நான் கண்ட உண்மை.
அரசியல் வட்டாரத்தில் இருந்து குற்றச்சாட்டுகள் வந்தாலும் அதில் உண்மை இருக்கிறதா? என்று பார்ப்பேன். குற்றச்சாட்டுகளை சாதகமாக எடுத்துக்கொண்டேன். இந்த தேர்தல் மூலம் பல விஷயங்களை புதிதாக படித்தேன். பத்திரிகையாளர்களின் அறிவுரைகளும் கிடைத்தன.
சமூக வலைதளங்களில் என் மீது வரும் விமர்சனங்களைப் படிப்பதற்கு எனக்கு நேரம் கிடைக்கவில்லை. 12 மணி நேரம் வேலையில் ஈடுபட வேண்டியிருந்தது. எனவே விமர்சனங்களை எல்லாம் ஒரு பிரச்சினையாக பார்க்கவில்லை.
தேர்தல்களின்போது ஓட்டுக்கு பணப்பட்டுவாடாவை தடுப்பது எங்களுக்கு ஒரு சவால்தான். சமுதாயத்தை நான் ஒருவரே திருத்திவிட முடியாது. சமுதாயத்தில் இருந்து எழும் பிரச்சினைகளுக்கு அந்த சமுதாயமே தீர்வு காணவேண்டும். பணப்பட்டுவாடாவை தவிர்க்க புதிய முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். பல்கலைக்கழகங்கள், பத்திரிகைகள் போன்றவை விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
என்னிடம் தரப்பட்ட புகார்களை விசாரிக்க நான் காலம் தாழ்த்தவில்லை. உடனடி நடவடிக்கைக்கு நாங்கள் ஏற்பாடு செய்தோம். எல்லா நிகழ்வையும் நாங்கள் உன்னிப்பாக கவனித்தோம். எதையும் இலகுவாக விட்டுவிடவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.