விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது ஒட்டுமொத்த தமிழர்கள் மீதும் சந்தேகக் கண்ணோட்டம் ஏற்பட்டதை போல் இன்று இஸ்லாமிய பயங்கரவாதத்தினால் ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மீதும் சந்தேகம் எழுவது வேதனைக்குரியது என அமைச்சர் ரவி கருணாநாயக தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கான சரியான வாய்ப்புகளை இனியாவது ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
இலங்கை சிங்கள பெளத்த நாடு, ஆனால் சிங்கள நாடாக இருந்தாலும் ஏனைய மதங்களும் இங்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனை சகல மக்களும் ஏற்றுகொள்ள வேண்டும். ஒரு சிலர் இதனை ஏற்க மறுப்பதன் மூலமாக நாட்டின் ஐக்கியத்தை நாசமாக்க முயற்சிக்க இடமளிக்க முடியாது.
மத இன பாகுபாட்டுக்கு அப்பால் இலங்கையர் என்ற உணர்வுடன் நாம் இணைந்து செயற்பட வேண்டும். இன்று மலேசியா, சிங்கபூர் ஆகிய நாடுகளை பார்த்தால் அவர்கள் நாடாக இணைந்து வாழ்கின்றனர். நாமும் அதேபோல் சிந்திக்க வேண்டும். அதை விடுத்தது இதனை வைத்து அரசியல் செய்யக் கூடாது. ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் எதிர்க்கட்சி தலைவரும் பொதுஜன பெரமுன கட்சியும் இதனை வைத்து அரசியல் செய்யலாம் என நினைப்பது தவறானது என்றும் அவர் குறிப்பிட்டார்.