2 ஆயிரம் ஆண்டு பழமையான மாதாவின் திருஉருவப்படம்

324 0

201610170726555295_2-thousand-year-old-matha-image-thousands-of-christians_secvpfகோவைக்கு கொண்டு வரப்பட்ட 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மாதாவின் திருஉருவப்படத்தை ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பார்வையிட்டு பிரார்த்தனை செய்தனர்.ஏசு கிறிஸ்து குழந்தையாக இருந்தபோது அவரை அன்னை மரியாள் கைகளில் வைத்திருந்தார். அதை நேரில் கண்டு நற்செய்தியாளர் புனித லூக்கா வரைந்து உள்ளார். இயற்கை மூலிகைகளால் வரையப்பட்ட பிரசித்தி பெற்ற இந்த திருஉருவப்படம் வரையப்பட்டு 2 ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது. இது இத்தாலி நாட்டில் ரோம் நகரில் பாதுகாக்கப்பட்டு வந்தது.

150 ஆண்டுகளுக்கு முன்பு, போப் ஆண்டவர் 9-ம் பத்திநாதர், இந்த படத்தை இரட்சகர் சபையினரிடம் கொடுத்து மாதாவை உலகறிய செய்யுங்கள் என்று கட்டளையிட்டார். இதைத் தொடர்ந்து உலகநாடுகள் முழுவதும் இந்த திருஉருவப்படம் பவனியாக கொண்டு செல்லப்படுகிறது. தற்போது இந்த படம் தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இது திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, ஆகிய இடங்களை தொடர்ந்து கோவைக்கு கொண்டு வரப்பட்டது. சூலூர், ஜோதிபுரம் ஆகிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அதன்பின்னர் நேற்று காலை 9.50 மணிக்கு கோவை காட்டூர் கிறிஸ்து அரசர் ஆலயத்துக்கு மாதா திரு உருவப்படம் கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் அலங்கார வாகனத்தில் மாதா திருஉருவப்படம் ஆலய வளாகத்தில் திருவீதி உலாவந்தது. தேவதைகள் போன்று வெண்ணிற ஆடை அணிந்து வந்த திரளான சிறுமிகள் உடன் வந்தனர்.

பின்னர் இரட்சகர் சபையினரிடம் இருந்து ஆலய பங்கு தந்தை குழந்தைசாமி, மாதாவின் திரு உருவப்படத்தை பெற்று, சிறப்பு பிரார்த்தனைகளுடன் பொதுமக்களுக்கு காட்சிக்கு வைத்தார். அப்போது ஆலயத்துக்கு வந்து இருந்த திரளான பெண்களும், ஆண்களும் மாதாவின் திருஉருவப்படத்தை தரிசித்து பிரார்த்தனை செய்தனர்.

இதையொட்டி காலை 10 மணி முதல் பாடல்கள், சிறப்பு நவநாள், மறையுரை, மாலை 6 மணிக்கு கூட்டு பாடற் திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மாதாவின் திருஉருவப்படத்தை தரிசனம் செய்தனர்.