இதுவரை காலத்தில் தமிழ் மக்களை மிகமோசமாக ஏமாற்றிய ஓர் அரசாங்கத் தலைவராக மைத்திரிபால சிறிசேனவுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், தமிழ் மக்கள் மத்தியில் மாத்திரமன்றி, சிங்கள மக்கள் மத்தியிலும் ஒரு ஏமாற்றுக்காரராகத் தன்னைச் சித்தரித்துக் கொண்டுள்ள ஜனாதிபதி சிறிசேனவின் அரசியல் எதிர்காலம் இத்தோடு முடிவடைந்துவிட்டது.
இனிவரும் காலங்களில் அவரை ஒரு பாராளுமன்ற உறுப்பினராகக் கூட மக்கள் தெரிவு செய்ய மாட்டார்கள் எனவும் குறிப்பிட்டார்.
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ததையும், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதையும் ஒப்பிட முடியாது என்றும் நாட்டில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியை மேற்கோள்காட்டி, அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.