குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது- ஹரிசன்

364 0

குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத, அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க முடியாதென அமைச்சர் ஹரிசன் தெரிவித்தார்.

கண்டியில்   நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஹரிசன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

”அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரரேரணை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் சில உறுப்பினர்களுக்குள் மாறுப்பட்ட கருத்துக்கள் இருக்கின்றன.

கத்தோலிக்க மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிலர் இவ்வாறான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களைப் பொறுத்தவரை இந்த விடயம் தொடர்பில் தீர்க்கமான விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்பதே நிலைப்பாடாக இருக்கிறது.

எவ்வாறாயினும், நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஒருசிலர் முடிவெடுத்துவிட முடியாது. மாறாக, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவிலேயே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றமிழைத்திருந்தாலோ, அதற்கான சாட்சிகள் இருந்தாலோ பொலிஸில் முறைப்பாடளிக்க முடியும். இல்லையென்றால் நீதிமன்றத்தை நாடமுடியும்.

ஆனால், இதுவரை அவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. எனவே, குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத ஒருவர் தொடர்பில் எம்மால் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது.

எதிர்க்கட்சியினர் இந்தச் சம்பவத்தை பயன்படுத்தி, எப்படியாவது அரசியல் இலாபம் தேடவே முயற்சித்து வருகிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை இந்த அரசாங்கத்தை பலவீனப்படுத்த வேண்டும் என்பதுதான் முக்கியமான நோக்கமாகும்.

மஹிந்த உள்ளிட்ட எதிரணித் தலைவர்கள், அமைச்சர் ரிஷாட்டை தங்களுடன் ஒருபோதும் இணைத்துகொள்ளப்போவதில்லை என்ற உறுதிப்பாட்டை வழங்குவார்களா?

நாட்டு மக்களுக்கு இந்த உறுதிப்பாட்டை பகிரங்கமாக வெளிப்படுத்துவார்களா? இல்லை. ஐக்கிய தேசியக் கட்சி என்பது அனைத்து இனங்களுக்கும் உரிய ஒரு கட்சியாகும்.

அமைச்சர் ரிஷாட் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், நாம் நிச்சயமாக அதுதொடர்பில் நடவடிக்கை எடுப்போம்.

இந்த விடயம் தொடர்பில் தற்போது தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தெரிவுக்குழுவில் சுயாதீனமாக விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

தற்போதைய சூழ்நிலையில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதைவிடுத்து இதில் அரசியல் இலாபம் தேட முனையக்கூடாது” என அமைச்சர் ஹரிசன் தெரிவித்துள்ளார்.