அரசியல்வாதிகள் தேவையில்லாமல் தன்னை சீண்டினால், பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்படுமென பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்தார்.
கண்டி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிப் பெற்றுக்கொண்ட ஞானசார தேரர், தலதா மாளிகைக்கும் விஜயம் மேற்கொண்டு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ஞானசார தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
”உண்மையில், சற்று சோர்வாக இருந்தமையால் மதவழிபாடுகளில் ஈடுபட்டு ஓரமாக இருப்போமென நான் நினைத்தேன்.ஆனால், இதனை அறிந்த சில இளைஞர்கள், என்னை மீண்டும் வெளியில் வரச்சொன்னார்கள். சிலர், நான் விடுதலையானதை தனது வீட்டில் அப்பா வந்து விட்டதாக உணர்வதாகவும் கூறினார்கள்.
இவ்வாறு இருக்கும்போது, எப்படி அமைதியாக இருக்கமுடியும்? இதனால்தான், எந்தப் பிரச்சினை வந்தாலும் பரவாயில்லை என்று வெளியில் வந்துள்ளேன்.
தற்போது, களைப்பாரவோ மதவழிபாடுகளில் ஈடுபடவோ எமக்கு நேரமில்லை. சமூகம் தொடர்பில் சிந்திக்க வேண்டிய தருணம் இது.
நாட்டில் நிலவியுள்ள இந்தப் பிரச்சினை, முடிவுக்குக் கொண்டுவரும் வரையில் நாம் தொடர்ந்தும் செயற்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
தார்மீக ரீதியாக எனக்கு வழங்கப்பட்டுள்ள அரசியலிலேயே நான் தற்போது ஈடுபட்டு வருகிறேன். இதுதான் உண்மையாகும். கட்சி அரசியலில் ஈடுபட்டுள்ள சில அரசியல் முதலைகள் என்னை, தேவையில்லாமல் சித்தரிக்க முற்படுகிறார்கள்.
இவர்களுக்கு ஒன்றைக் கூறிக்கொள்ள வேண்டும். தேவையில்லாமல் என்னை தூண்டிவிட வேண்டி, தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று எச்சரித்துக் கொள்கிறேன்.
எமக்கு கட்சி அரசியல் என்றும் முக்கியமானதல்ல. 70 வருடங்களாக அரசியல்வாதிகள் நாட்டில் செய்தமை தற்போது நன்றாக விளங்குகின்றது.
எனவே, இருப்பதையும் இல்லாமல் ஆக்கிக் கொள்ள வேண்டாம் என்றும் எம்மீது தேவையில்லாமல் குறைக் கூறாமல் அமைதியாக அரசியல் செய்துக் கொள்ளுமாறும் நாம் அவர்களிடம் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாம் எமக்கான கடமைகளைத் தான் செய்துக் கொண்டிருக்கிறோம். இது 5 வருடங்களில் முடிவுக்கு வந்துவிடும் கடமையல்ல.
எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த, ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணிலின் உதவியாளர்கள் அல்ல. அப்படியென்னால் நான் சிறைக்குக் கூட சென்றிருக்க மாட்டேன். யாரும் ஆசைப்பட்டு சிறைச்சாலைக்கு செல்வதில்லை” என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.