எந்தவித குற்றமும் செய்யாத என்னை பதவி விலகுமாறு கூறுவதை ஏற்க நான் தயாரில்லை. எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள நான் தயார் என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சியமளித்து என்னை நிரூபிப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2014, 2015ஆம் ஆண்டுகளில் அமைச்சராக இருந்த காலங்களில் அரிசி இறக்குமதியில் செய்யப்பட்ட முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் விசாரணைகளுக்காக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நிதிக் குற்ற விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் மற்றும் அவர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயங்கள் குறித்து வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் இது குறித்து மேலும் கூறுகையில்,
கடந்த 2014, 2015ஆம் ஆண்டுகளில் இடம்பெற்றதாக கூறப்படும் அரிசி இறக்குமதி விடயங்களில் சில முறைகேடுகள் இடம்பெற்றதாக கூறியே அது குறித்து வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக்கொள்ள விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தேன். இது குறித்து நான் எனக்கு தெரிந்த அனைத்து விடயங்களையும் முன்வைத்துள்ளேன்.
மேலதிக விசாரணைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளுக்கு நான் தடையாக இருக்கப்போவதில்லை. ஊடகங்கள் இன்று என்னை தவறான வகையில் சித்தரிக்க முயற்சித்து வருகின்றன . என் மீது எந்த தவறும் இல்லாத நிலையில் என்னை குற்றவாளியாக காட்டவே முயற்சிக்கின்றனர். சிலர் என்னை பயங்கரவாதி என்றே கூறும் நிலைமை உருவாகியுள்ளது.
இன்று எனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றினை கொண்டுவந்துள்ளனர். நான் பதவி விலக வேண்டும் எனவும் இவர்கள் கூறுகின்றனர். நான் எந்த தவறும் செய்யாத நேரத்தில் குற்றச்சாட்டை ஏற்க நான் தயாரில்லை. அதேபோல் இவர்களுக்கு அஞ்சி நான் எனது அமைச்சை துறக்கவும் தயாரில்லை. நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரட்டும் நான் அதற்கு முகங்கொடுக்க தயாராக உள்ளேன். என்னால் எந்த குற்றமும் இடம்பெறாத நிலையில் நான் தைரியமாக அதற்கு முகங்கொடுக்க தயாராக உள்ளேன். அத்துடன் இப்போது பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதிலும் நான் சாட்சியமளிக்க தயாராக உள்ளேன். என்னை நியாயமானவன் என நிரூபிக்க என்னால் முடியும்.
எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அனைத்துமே அடிப்படை நியாயமற்றதாகவே உள்ளன. குறிப்பாக நான் இராணுவத்தளபதியை தொடர்புகொண்டு அழுத்தம் கொடுத்ததாக கூறுவது முற்றிலும் பொய்யானது. அதனை இராணுவத்தளபதியே கூறியுள்ளார்.
மேலும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நான் ஒருநாளும் துணைபோனவன் அல்ல. நான் கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியிலும் அமைச்சராக செயற்பட்டுள்ளேன். அப்போது என்னுடன் இணைந்து செயற்பட்ட நபர்கள் தான் இன்று தமது அரசியல் சுய லாபங்களை கருத்திற்கொண்டு எனக்கெதிராக செயற்பட ஆரம்பித்துள்ளனர். யார் அழுத்தம் கொடுத்தா லும் என்மீது குற்றம் இல்லாத நிலையில் அனைத்து சவால்களையும் தைரியமாக முகங்கொடுக்க நான் தயார் என்றார்.