பிரதமர் மோடி உரிய நேரத்தில் சென்னை வருவார்

405 0

201610170748201809_pm-modi-to-visit-chennai-soon-to-enquire-on-jayalalithaa_secvpfதமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து கேட்டறிய பிரதமர் மோடி உரிய நேரத்தில் சென்னை வருவார் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று காலை திருப்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருப்பூரில் தொடங்கியுள்ளது. வருகிற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா கட்சி எடுக்க வேண்டிய வியூகங்கள், கடைபிடிக்க வேண்டிய வியூகங்கள் குறித்து இந்த செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன.

காவிரி நதியில் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் முறைப்படி கிடைத்தாக வேண்டும். கர்நாடக மாநிலம் தண்ணீர் தர வேண்டும். அதில் இரண்டாவது கருத்து பா.ஜனதாவுக்கு கிடையாது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, காவிரியில் இருந்து முறைப்படி தமிழகத்துக்கு தண்ணீர் கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உறுதியாக செய்யும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. மேலாண்மை குழு அமைக்கக்கூடிய கால கட்டத்தை பொறுத்து அதையும் நிச்சயம் அமைத்துக்கொடுக்கும்.

இன்று தமிழகத்தில் நதிநீர் பிரச்சினையை அரசியலாக்கி ஆதாயம் தேடிக்கொண்டிருக்கிறார்கள். தி.மு.க.வும், காங்கிரசும் கூட்டணியாக மத்தியில் ஆட்சியில் இருந்தபோது தான் காவிரி நதி நீர் ஆணையத்தின் தீர்ப்புகள் வந்து, அவை அரசிதழில் பதிவு செய்யப்படாமலும், மேலாண்மை வாரியம் அமைக்கப்படாமலும் இருந்தது. அமைதியான அந்த காலகட்டத்தில் அமைக்கப்பட்டு இருந்தால் இன்று அந்த மேலாண்மை குழு, முழு அதிகாரத்துடன் செயல்பட்டு இருக்க முடியும்.

தி.மு.க.வும், காங்கிரசும் இணைந்து நடத்திய மத்திய அரசு தான் தமிழகத்துக்கு துரோகத்தை செய்தது. இந்த 2 கட்சிகளும் தாங்கள் செய்த துரோகத்தை மறைக்கும் வகையில் இன்று பல்வேறு போராட்டங்களை நடத்தி, தங்கள் தவறுகளை மறைக்கப்பார்க்கிறார்கள். காங்கிரஸ் கட்சி உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார்கள் என்று சொன்னால், அதற்கு முழுக்க முழுக்க தமிழக மக்களை ஏமாற்றி அரசியல் நடத்துவதற்குத்தான்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, மருத்துவமனைக்கு சென்று முதலில் பார்த்த தலைவர் நான். பா.ஜனதா சார்பில் தமிழகத்தில் உள்ள மாநில தலைவர், அகில இந்திய தலைவர் அமித்ஷா சென்னை வந்துள்ளனர். பிரதமருக்கு அடுத்த நிலையில் இருக்கக்கூடிய நிதி மந்திரி வந்துள்ளார். தமிழகத்தின் மீது அதிக அக்கறை கொண்டு செயல்படும் மத்திய மந்திரி வெங்கையாநாயுடு மருத்துவமனைக்கு வந்தார். பா.ஜனதா தலைவர்கள் தொடர்ந்து வந்து சென்றுள்ளார்கள்.

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பிரதமர் மோடி வந்து பார்க்க வேண்டும் என்பதில் யாருக்கும் இரண்டாவது கருத்து கிடையாது. ஆனால் பிரதமர் வரும்போது முதல்-அமைச்சரை சந்திக்கும் சூழ்நிலை, அவருடைய உடல்நிலை இவற்றை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட வேண்டும். பிரதமர் மட்டும் முடிவு எடுக்கக்கூடிய விஷயம் அல்ல. ஆகவே அதை மனதில் கொண்டு பிரதமர் உரிய நேரத்தில் உரிய வகையில் முதல்-அமைச்சரை சந்திக்க சென்னை வரும் முடிவுகளை எடுப்பார்.

ஜல்லிக்கட்டு விஷயமாக தொடர்ந்து 2 ஆண்டுகளாக நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். ஒரு வாரத்துக்கு முன்பு டெல்லி சென்று சுற்றுச்சூழல் மந்திரியை சந்தித்து 45 நிமிடம் ஜல்லிக்கட்டு கட்டாய தேவை என்பதை விளக்கமாக சொல்லியிருக்கிறேன். சென்ற ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய அரசு வசதி செய்தும் கூட, சுப்ரீம் கோர்ட்டு தடுக்கப்பட்ட விவரங்களை கூறியுள்ளோம். இந்த ஆண்டு கட்டாயமாக ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சொல்லியிருக்கிறோம். இதே கோரிக்கையை பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி அனந்தகுமாரிடமும், இணை மந்திரி அலுவாலியாவிடமும் பேசி இருக்கிறோம். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நிச்சயமாக நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.