மர்ம காய்ச்சலுக்கு அடுத்தடுத்து 3 குழந்தைகள் பலியான சம்பவத்தை தொடர்ந்து, சென்னை புறநகர் பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
ஏற்கனவே மழைக்கால நோய்கள், வெப்ப நோய்கள் என பயத்தில் இருந்த மக்களுக்கு மர்ம காய்ச்சலால் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரிய பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. பொழிச்சலூரில் சுகாதார சீர்கேடு அதிகமாக இருப்பதாகவும், அதன் காரணமாக அந்த பகுதியில் நோய்த்தொற்று ஏற்படுவதாகவும் புகார் கூறப்பட்டது. மேலும் அந்த பகுதியில் பலருக்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாகவும் பொதுமக்கள் சார்பில் கூறப்பட்டது.
இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன், பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளும் கைகோர்த்து உள்ளனர். தவிர நகராட்சி, ஊரக வளர்ச்சி கழகம், பேரூராட்சியை சேர்ந்த சுகாதார பணியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளில் அதிகளவும் நோய்த்தொற்று புகார் எழுப்பப்பட்டு வருவதால், நடமாடும் சிறப்பு மருத்துவ முகாம்கள் செயல்பட உள்ளன. இதில் அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள், செவிலியர்கள், ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து தமிழக அரசு பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-
எழும்பூர் குழந்தைகள் அரசு ஆஸ்பத்திரியில் 3 குழந்தைகள் உயிரிழந்திருப்பது வேதனையான விஷயம். ஆனால் இதற்கும் டெங்கு காய்ச்சலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. குழந்தைகள் வீடு அமைந்துள்ள பகுதி முழுவதும் சுகாதார அதிகாரிகள் தீவிர ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பகுதி முழுவதும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளோம்.
முக்கியமாக பொழிச்சலூர் பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு நிலவுவதாக அறிகிறோம். எனவே அங்கு வார்டு வாரியாக மருத்துவ வாகனங்கள் மூலம் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பகுதி மக்கள் அனைவருக்கும் காய்ச்சல் அறிகுறி உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு வீட்டின் முன்பும் பிளச்சிங் பவுடர், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை நகர்ப்புறங்களில் நிலைமை கட்டுக்குள் இருப்பதை தொடர்ந்து, சென்னை புறநகர் பகுதிகளில் அதிக கவனம் செலுத்த தொடங்கி உள்ளோம். பல்லாவரம், தாம்பரம், குன்றத்தூர், மேடவாக்கம் உள்பட சென்னை புறநகர் பகுதிகளில் நடமாடும் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இந்த முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு எல்லாவிதமான மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன. காய்ச்சல் அறிகுறி தெரியவரும் நிலையில் பொதுமக்களை உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கிறோம்.
வீடு தோறும் தண்ணீரை ஆய்வு செய்து வருகிறோம். கொசுப்புழுக்கள் அழிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறோம். குடிநீரில் குளோரின் அளவு பரிசோதித்து வருகிறோம். வீடுகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள தேவையான அறிவுரைகளையும் வழங்கி வருகிறோம். இதுதொடர்பாக ‘104’ என்ற கட்டுப்பாட்டு எண்ணையும் அறிவித்து உள்ளோம். காய்ச்சல் பரவாமல் தடுக்க எல்லா விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.