சர்ச்சைக்குரிய வைத்தியருக்கு எதிராக இரு தாய்மார் முறைப்பாடு

300 0

சொத்துக் குவிப்பு விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபியிடம் சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுப் பிரிவு சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குருணாகல் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட குறித்த வைத்தியர் நேற்று பிற்பகல் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழுவினரால்  பொறுப்பேற்கப்பட்டு, சி.ஐ.டி.யின்  தலைமையகமான நான்காம் மாடிக்கு அழைத்து வரப்பட்டார்.

இந் நிலையிலேயே அவரிடம் தடுப்புக் காவலில் சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி குறித்த வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ள போதும், அவருக்கு எதிராக கும்ப கட்டுப்பாடு விவகார குற்றச்சாட்டும் எழுந்துள்ள நிலையில் அது தொடர்பிலும் விசாரிக்க சி.ஐ.டி. தீர்மானித்துள்ளது.

இந் நிலையில் குறித்த வைத்தியருக்கு எதிராக குடும்ப கட்டுப்பாடு தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் அவற்றை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கையளிக்குமாறு பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை இன்று குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு சென்ற இரு பெண்கள், கைதாகியுள்ள ஷாபி வைத்தியருக்கு எதிராக முறைப்பாடளித்துள்ளனர்.

32,29 வயதுகளையுடைய குருணாகல் மற்றும் வாரியபொல பகுதிகளைச் சேர்ந்த இரு பெண்களே இந்த முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.

தாம் திருமணமாகி சிறிது காலத்திலேயே கருத்தரித்ததாகவும், தமக்கும் சிசேரியன் சத்திர சிகிச்சை மூலமே குழந்தை பிறந்ததாகவும் அந்த சத்திர சிகிச்சையை ஷாபி வைத்தியரே முன்னெடுத்ததாகவும் கூறியுள்ளனர்.

இந் நிலையில் அதன் பின்னர் தமக்கு குழந்தை பேறு கிடைக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், தமக்கும் குறித்த வைத்தியரால் குடும்பகட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளதா என சந்தேகம் எழுவதாக கூறியுள்ளனர்.

இந் நிலையில் அந்த முறைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ள வைத்தியசாலை, நாளைய தினம் குறித்த பெண்கள் இருவரின் விருப்பத்தின் பேரில் அவர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பது குறித்த சோதனைகளுக்கு அவர்களை உட்படுத்த தீர்மானித்துள்ளது.