நாட்டில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகளை எந்தக் காரணம் கொண்டும் விடுவிக்க முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஞானசார தேரரையும் தமிழ் அரசியல் கைதிகளையும் ஒப்பிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காகக் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடைச் சிறைச்சாலையிலிருந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளார்.
ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்ய முடியுமாயின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களை ஏன் விடுதலை செய்யமுடியாது? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, சபையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஞானசார தேரர் பயங்கரவாதி அல்லர். அவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவரும் அல்லர். நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டே அவர் மீது முன்வைக்கப்பட்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது.
நான் எனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரைப் பொதுமன்னிப்பில் விடுதலை செய்ததில் தவறேதும் இல்லை.
ஆனால், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்றும் தண்டனை அனுபவித்துவரும் அரசியல் கைதிகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள். அவர்களுக்குத் தற்போதைய நிலைமையில் பொதுமன்னிப்பு வழங்குவது கடினம்.
ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பளித்து அவரை விடுவிக்குமாறு பௌத்த மத பீடங்கள், சிவில் அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்புக்களும் என்னிடம் கோரி வந்தன. அதற்கமைய அவருக்கு நான் பொதுமன்னிப்பு வழங்கினேன்.
ஞானசார தேரருடன் அரசியல் கைதிகளை ஒப்பிட வேண்டாம். இவர் செய்த குற்றம் வேறு. அவர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றம் வேறு. இரண்டையும் ஒப்பிட வேண்டாம்.
தற்போது 200 இற்கு உட்பட்ட அரசியல் கைதிகள்தான் நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ளனர். ஏனையோர் படிப்படியாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளில் குற்றவாளிகளும் உள்ளனர் சந்தேகநபர்களும் உள்ளனர். குற்றவாளிகள் தண்டனையை அனுபவிக்கின்றார்கள். சந்தேகநபர்கள் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இவர்கள் அனைவரினதும் விடுதலை விவகாரம் தொடர்பில் நாம் உயர்மட்ட பேச்சுக்களைத் தொடர்ந்தும் நடத்தி வருகின்றோம். அவர்களை வைத்து எவரும் அரசியல் செய்ய வேண்டாம்” என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.