பயங்கரவாத தாக்குதலையடுத்து சீன நாட்டவர்கள் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதற்கு சீன அரசாங்கம் விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கும் இலங்கைக்கான சீன தூதுவருக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்தையின்போது இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த மாதம் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து இலங்கைக்கான சுற்றுலாவைத் தவிர்க்குமாறு சீனா ஆரம்பத்தில் அறிவித்திருந்தது.
தற்பொழுது இலங்கைக்கான சுற்றுலாவின்போது அவதானத்துடன் செயற்படுமாறு சீனா அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு இலங்கை சுற்றுலாத் தொழில் துறைக்கு சிறந்ததொரு மேம்பாட்டு நடவடிக்கையாகும் என இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தையடுத்து இலங்கைக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள சுற்றுலா எச்சரிக்கையை நீக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளிநாடுகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) மாலை அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போதே பிரதமர் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.