வெசாக் தினத்தில் வௌிப்பட்ட நல்லிணக்கம்!

471 0

இம்முறை வெசாக் தினம் மிகவும் அமைதியான முறையில் அனுஷ்டிக்கப்பட்டது. பெரும்பான்மையினர் செறிந்து வாழ்ந்து வரும் பிரதேசங்களில் வெசாக் தோரணங்கள்,வர்ண அலங்காரங்கள் , மின்குமிழ் வேலைப்பாடுகளுக்கு குறைவிருக்கவில்லை. எனினும் முதன் முறையாக தொரண  என்ற அலங்கார அமைப்பு இல்லாத  ஒரு வெசாக் தினமாகவும் பெரியளவான உணவு தன்சல் இல்லாததாகவும் இது அனுஷ்டிக்கப்பட்டமை ஒரு குறையாகவே தெரிந்தது.

இந்த குறையை இல்லாதாக்குவது போன்று இம்முறை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த சம்பவம் பல முஸ்லிம்கள்  தமது மார்க்க கட்டுப்பாடுகளையும் தளர்த்தி வெசாக் பந்தல் அமைத்தல், தன்சல் செயற்பாடுகளில் ஈடுபடல் ஏன் விகாரைகளுக்கு செல்லல் போன்ற விடயங்களில் ஈடுபட்டனர். அதேவேளை மே மாதம் 21 ஆம் திகதி ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் இடம்பெற்று ஒரு மாதத்தை நினைவு கூரும் வகையில் சில இடங்களில் இவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலியும் செலுத்தினர்.

முஸ்லிம் பெண்கள் பூக்களுடன் பெரும்பான்மையின பெண்களுடன் இணைந்து விகாரைகளுக்கு சென்றனர். இப்படியான ஒரு நல்லிணக்க வெசாக் தினமாக இது அமைந்தமைக்கு பல காரணங்கள் உள்ளன.  முதலாவது ஈஸ்டர் தினமன்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் சம்பவம். இரண்டாவது அதன் பின்னர் இலங்கையில் சில இடங்களில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக இடம்பெற்ற தாக்குதல்களை குறிப்பிடலாம்.

குறித்த இந்த  சம்பவங்கள் இம்மக்களை அச்சத்துக்கும் நெருக்கடிகளுக்கும் தள்ளியது. பெரும்பான்மையினர் அதிகளவில் வசித்து வரும் நகர்ப்புறங்களில் முஸ்லிம் வர்த்தகர்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதோடு தமது சாதாரண அலுவல்களைக் கூட முன்னெடுக்க அவர்கள் யோசித்தனர். அதே வேளை பெரும்பான்மை மக்கள் வசிக்கும் குடியிருப்புப்பகுதிகளில் வசித்து வந்த முஸ்லிம் குடும்பங்களும் மனதில் ஒரு வித அச்சத்துடனேயே நாட்களை கடத்தினர்.

இதன் காரணமாக சிங்கள மக்களுடன் இணைந்து நல்லிணக்கத்தை வெளிப்படுத்த வேண்டிய சந்தர்ப்பத்துக்கு அவர்கள் காத்திருந்தனர். அதற்கு சரியாக வழிசமைத்துக்கொடுத்தது வெசாக் பௌர்ணமி போயா தினம். அதை முஸ்லிம் மக்கள் பயன்படுத்திக்கொண்டனர் என்றே கூற வேண்டியுள்ளது . எனினும் நல்லெண்ணத்துக்கான இந்த சமிக்ஞையை பெரும்பான்மையினத்தவர்கள் ஏற்றுக்கொண்டார்களா அல்லது கண்டு கொண்டார்களா என்ற கேள்வி எழுகிறது.

பௌத்தர்களின் மனநிலை

ஈஸ்டர் தின தாக்குதல்களின் பின்னர்  பாதுகாப்பு நிலைமைகளை கருத்திற்கொண்டு  நாட்டில் அரசாங்கம் முன்னெடுத்த சில நடவடிக்கைகளால் அனைத்து பிரிவினரும் பாதிக்கப்பட்டனர்.  எனினும் பாதுகாப்பு நிலைமைகளுக்காக அனைத்து மக்களும் அதை ஏற்றுக்கொள்ளவேண்டியவர்களாக இருந்தனர்.

நீண்ட காலத்துக்குப்பிறகு மே தின கூட்டங்கள் இரத்து செய்யப்பட்டன. சமயம் சார்ந்த முக்கிய நிகழ்வுகள்  மற்றும் சிவில் நடவடிக்கைகள் சார்ந்த ஊர்வலங்கள், கூட்டங்கள் ,களியாட்ட நிகழ்வுகள் அனைத்துமே நிறுத்தப்பட்டன. குறித்த நிகழ்வுகளை அமைதியாக முன்னெடுக்கும்படி அரசாங்கம் கூறியது. இதை ஏனைய சிறுபான்மை  மக்களும் பின்பற்றினர். ஆனால் பௌத்த சிங்கள மக்களுக்கு இது எரிச்சலை ஏற்படுத்திய சம்பவமாகவே இருந்தது. ஏனெனில் வெசாக் பௌர்ணமி தினமானது சிங்கள பௌத்தர்களால் ஒரு வார காலத்துக்கும் கூடுதலாக கொண்டாடப்படும் நிகழ்வாகும். இலங்கை பௌத்த நாடு என்ற கோஷங்கள் 2009 ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த பிறகு அதிகரித்து வருவதை நாம் அவதானித்து வருகிறோம்.

இந்நிலையில் அதை அழுத்தமாக பதிவு செய்யும் ஒரு சமய அனுட்டான நிகழ்வாகவே வெசாக் பௌர்ணமி தினம் இந்நாட்டின் கடும்போக்கு சிங்கள பௌத்தர்களிடையே அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

நாட்டின் அனைத்து பாகங்களிலும் இந்த வெசாக் தின பதிவுகள் தாராளமாகவே காட்சி தரும் வண்ணம் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை நாம் அவதானித்திருக்கலாம். இவ்வாறு நாடு பூராகவும் அனுட்டிக்கப்படும் வேறு எந்த சமய நிகழ்வுகளும் இல்லை என்பதை நாம் நோக்க வேண்டும்.

இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பு நிலைமை கருதி அரசாங்கம் வெசாக் பெளணர்மி தினத்திற்கும் சில கட்டுப்பாடுகளை விதித்தமை சில கடும்போக்கு  சிங்கள பௌத்தர்களை எரிச்சலடையச்செய்திருந்தது. ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவங்களையும் அதற்கு காரணமாக இருந்த சூத்திரதாரிகளின் பக்கம் அவர்களின் கோபம்   திரும்பியது.     கடந்த 12 மற்றும் 13 ஆம் திகதிகளில்  சிலாபம் ,குளியாப்பிட்டி பகுதிகளில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற சம்பவங்களின் பின்னணியில் மேற்குறித்த காரணங்கள் செல்வாக்கு செலுத்தியிருக்கலாம்.

இந்நிலையிலேயே வெசாக் தினத்தை வரவேற்கும் பல செயற்பாடுகளில் முஸ்லிம்கள் தாமாகவே முன்வந்து ஈடுபட்டனர். இது பௌத்தர்களை சாந்தமடையச் செய்வதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சியாகட்டும்  அல்லது தமது பாதுகாப்பை கருத்திற்கொண்டு பௌத்தர்களின் நல்லெண்ணத்தை பெற்றுக்கொள்ளும் செயற்பாடாகட்டும் இது இலங்கை வரலாற்றில் முஸ்லிம் சமூகத்தினரின் மத்தியில் பௌத்த சிங்களவரிடையே பல விடயங்களில் இணங்கிப்போகத்தான்  வேண்டும் என்ற மனநிலையை தோற்றுவிப்பதாக உள்ளது.

எது எவ்வாறாக இருந்தாலும் நாட்டின் பல பாகங்களில் வழமையான வெசாக் நிகழ்வுகளை முன்னெடுக்க பௌத்தர்கள் தயங்கவில்லை. சிறிய அளவிலான தன்சல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. இதில் முஸ்லிம் சமூகத்தினரும் பங்கெடுத்திருந்தனர்.

நம்பிக்கையிழந்துள்ள மக்கள்

ஈஸ்டர் தின தாக்குதல்களின் பின்னர் இலங்கையின் இடம்பெற்ற சில கசப்பான சம்பவங்களினால் மும்மதங்களையும் சேர்ந்தவர்கள் என்னவோ தமது வழிபாட்டு தலங்களுக்கு செல்வதை குறைத்துள்ளனர் என்றே கூற வேண்டியுள்ளது.  தாம் பின்பற்றும் மதத்தின் மீது இவர்கள் நம்பிக்கையிழந்துள்ளார்களா அல்லது அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிழந்துள்ளனரா என்பது புரியவில்லை.  இதற்கு பிரதான காரணமே பாதுகாப்பு தொர்டபில் அரசாங்கம் மக்களுக்கு கூறி வரும் சமாதானங்கள்.

பாடசாலைகளில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது மாணவர்களை எந்த தயக்கமுமின்றி கல்வி கற்க அனுப்புங்கள் என கல்வி அமைச்சரும் முப்படைகளின் தளபதிகளும் பெற்றோர்களுக்கு அறிவிக்கின்றனர். ஆனால் மத வழிபாட்டுத் தளங்களுக்கு பயப்படாமல் செல்லுங்கள் என எவருக்கும் கூறத் தைரியம் இல்லை.

மறுபக்கம் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 150 பேரில் 90 வீதமானோரை கைது செய்து விட்டோம் என்றும் பாதுகாப்பு தரப்பு கூறுகிறது. எனினும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் உறுதியான நிலைப்பாடொன்றுக்குள் அரசாங்கம் வர இன்னும் தயார் இல்லை.

இதனால் பாரம்பரிய மத வழிபாடுகள்,அனுஷ்டானங்கள் ,பழக்க வழக்கங்களைக் கொண்டிருக்கக்கூடிய இலங்கை வாழ் மக்கள் அதில் தடைகள் ஏற்படுமிடத்து அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிழக்க தலைப்படுகின்றனர்.

இல்லையேல் அப்படியான சம்பவங்கள் ஏற்பட காரணமான பிறிதொரு இனத்தை நோக்கியதாக அவர்களின் கோபம் திரும்புகிறது.  இதை நிவர்த்தி செய்ய வேண்டியதொரு கட்டாயத்தில் அரசாங்கம் இருக்கின்றது.  இலங்கையின் ஜனநாயகமானது மூவின மக்களினதும் அபிலாஷைகளையும் எதிர்ப்பார்ப்புகளையும்  நிறைவேற்றக்கூடியதாக காணப்பட்டாலும்  நாட்டின் இறைமைக்கு குந்தகம் விளைவிக்கும் ஏதேனும் சம்பவங்கள் இடம்பெற்றால் ஒரு சாராரை மட்டும் பாதுகாக்கும் அல்லது திருப்தி படுத்தும் வண்ணம் செயற்படுவதை ஏற்க முடியாது .

மட்டுமன்றி இனங்களிடையே நம்பிக்கையையும் ஒற்றுமையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வழிவகைகளை ஏற்படுத்துதல் அவசியம். அரசாங்கத்தின் மீதும் தம்மை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் மீதும் நம்பிக்கையிழந்துள்ள மக்களே  வேறு வழியின்றி மாற்று வழிகளிலாவது  தம்மை எதிரிகளாக பார்க்கும் மக்களிடம் நெருங்குவதற்கும் அவர்களை சாந்தமடையச்செய்வதற்கும் முயற்சிக்கின்றனர்.

வெசாக் தினத்தில் முஸ்லிம் சமூகத்தினர் மேற்கொண்ட முயற்சிகள் இந்த வகைக்குள்ளேயே அடங்குகின்றன. இது ஒரு வகையில் வேதனைகளையும் வலிகளையும் அச்சத்தையும் மனதில் சுமந்து கொண்டு வெளியே பெரும்பான்மையின மக்களிடம் வேறு முகத்தை காட்டி வாழ் வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.  இவ்வாறு இன்னும் எத்தனை காலங்களுக்கு வாழ முடியும் என்பது முக்கிய விடயம்.

இது ஒரு வகையில் ஓர் அடிமைத்தனமான செயலாகவே உள்ளது. இந்த நாட்டில் எல்லா இனத்தவர்களுக்கும் சுயகௌரவம் என ஒரு விடயம் உள்ளது என்பதையும் அவர்கள் அனைவரும் சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டியதும் அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையுமாகும்.