சந்தேகத்துக்கிடமான முறையில் சொத்துச் சேகரித்தமைத் தொடர்பில், கைதுசெய்யப்பட்டுள்ள குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர், செய்கு சியாப்தீன் மொஹமட் ஷாபி என்ற வைத்தியரின், சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதற்கமைய, குறித்த வர்த்தகர் முகவர் நிலையங்கள் ஊடாக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்கு போலி மருத்துவச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொடுத்துள்ளாரென்றும், இந்த நடவடிக்கைகள் குறித்த வைத்தியரின் தனிப்பட்ட மருத்துவ சிகிச்சை நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இவர் ஒப்பந்தம் அடிப்படையில் வீதி புனரமைப்பு, பராமரிப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும் கடந்த பொதுத் தேர்தலில் அமைச்சர் ரிஷாட் பதியூதின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டவரென்றும் இவர் தேர்தலில் போட்டியிட்டதால், அரச சேவையிலிருந்து விலகி, பின்னர் விசேட அமைச்சரவைப் பத்திரம் ஊடாக மீண்டும் வைத்தியராகக் கடமையாற்ற வாய்ப்பு பெற்றுக்கொண்டவரென்றும் தெரிவிக்கப்படுகின்றது.