பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பார்மா, சிரியா போன்ற நாடுகளைச் சேர்ந்த அகதிகளை தமது மாகாணத்தில் தங்கவைப்பதற்கு எட்டு மாகாணங்களின் பிரதிநிதிகள் பகிரங்கமாகவே மறுப்புக்களை வெளியிட்டுள்ளனர்.
அவ்வாறிருக்க எந்தவிதமான பின்னணியையும், ஆராயாது கண்மூடித்தனமாக வவுனியாவில் தங்கவைப்பதற்கு தமிழ்ப் பிரதிநிதித்துவங்கள் தலையசைத்து ஆதரவளிப்பது ஏன் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வவுனியா பூந்தோட்டத்தில் வடமாகாண கூட்டுறவுத்துறைக்குச் சொந்தமான கட்டடம் உள்ளது. இது கடந்த காலத்தில் புனர்வாழ்வு முகமாக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது அங்கு ஒருவரே புனர்வாழ்வு பெற்றுவருகின்றார். வடக்கில் வீழ்ச்சியடைந்துவரும் கூட்டுறவுத்துறையை மறுசீரமைப்புச்செய்வது குறித்த முயற்சிகளின்போது இந்த கட்டடத்தொகுதியையும் மீளப்பெறுவதற்கான நடவடிக்கைகள் பலவகையிலும் முன்னெடுக்கப்பட்ட போதும் இதுவரையில் சாத்தியமாகி இருக்கவில்லை.
இந்ந நிலையில் நீர்கொழும்பு பகுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பார்மா, சிரியா உள்ளிட்ட நாடுகளைச்சேர்ந்த 1670அகதிகளை அங்கிருந்து வேறு மாகாணங்களுக்கு மாற்றுவது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. எனினும், எட்டு மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், இதனை எதிர்த்து பிரதமர் உள்ளிட்டவர்களிடம் அழுத்தங்களை பிரயோகத்திருந்தனர்.
அதன்பின்னர் குறித்த அகதிகளை வவுனியாவுக்கு அனுப்புவதென்றும், ஒருதொகுதியினரை யாழ்ப்பாணத்திற்கு அனுப்புவதென்றும் தீர்மானிக்கப்பட்டு முதற்கட்டமாக 35பேர் பூந்தோட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டு சொற்ப நாட்களிலேயே பௌத்ததேர்களின் ஆhப்பாட்டத்தால் பதற்றமான நிலைமைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
போர் நிறைவடைந்து பத்தாண்டுகளாகின்ற நிலையில் வடக்கு மாகாணத்தில் இன்னமும் தமிழர்கள் அகதிகளாக வாழ்கின்ற நிலைமைகளே உள்ளன. வலிவடக்கில் அகதிமுகாம்கள் இன்னமும் காணப்படுகின்றன. சோந்த நிலங்களுக்குச் செல்ல முடியாது மக்கள் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். துமிழகத்தில் ஒருஇலட்சத்திற்கும் அதிகமானவர்கள் தாயகம் திரும்பமுடியாது தவித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
இந்த விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது பற்றி சிந்திக்காது, பிற நாடுகளின் அகதிகளை வடக்கில் உள்வாங்க முயல்வதென்பது எந்தவகையில் நியாயமாகும். அதேநேரம், எட்டுமாகாணங்களில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் இவர்களை ஏற்க மறுத்திருக்கும் பின்னணி பற்றி ஆராயாது வவுனியாவில் இவர்களை தங்கவைப்பதற்கு அனுமதித்து தமிழ்பிரதிநிதித்துவங்கள் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.
தமிழர்கள் வந்தவர்களை வரவேற்கும் பாரம்பரிய பண்பு நிறைந்தவர்கள். ஆனால் அவர்களின் அன்றாட வாழ்வே அவலங்கள் நிறைந்ததாகவும் அச்சுறுத்தல் நிறைந்ததாகவும் நகர்ந்து செல்கின்ற நிலையில் புதிதாக அகதிகளை உள்ளீர்த்துக் கொள்வதானது பொருத்தமற்ற செயற்பாடாகும்.
மேலும் இந்த அகதிகள் எவ்வளவு காலத்திற்கு இருக்கப்போகின்றார்கள். இவர்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து எவ்விதமான விளக்கங்களும் இன்றி எழுந்தமானமாக முகாமில் தங்கவைப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. வுவனியாவில் பெரும்பான்மையின் நிகழ்ச்சி நிரலில் எல்லைக்கிராமங்கள் பறிபோகும் நிலைமைகள் தொடர்ந்த வண்ணமிருக்கையில் இவ்வாறு அகதிகள் என்ற பெயரில் மக்கள் தொகுதியினரை அமர்த்துவது மேலும் பிரச்சினைகளை கூர்ப்படைச்செய்யவே வழிசமைக்கும்.
தற்போது பிராந்திய பாதுகாப்பு குறித்த கரிசனையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இத்தகைய அகதிமுகாம்களை போரின் உக்கிரத்தினை சந்தித்துள்ள பகுதியில் அமைப்பதானது தொடர்ந்தும் அப்பகுதியை பதற்றத்துக்குள் வைத்துக்கொள்வதை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்படுகின்றதா என்ற கேள்வியையும் ஏற்படுத்தியுள்ளது என்றார்.