ரகசிய ஆயுதங்களை கொண்டு ‘அமெரிக்க போர்க்கப்பல்களை மூழ்கடிப்போம்’ ஈரான் மிரட்டல்

448 0

மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க போர்க்கப்பல்களை ரகசிய ஆயுதங்களை கொண்டு மூழ்கடித்து விடுவோம் என ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.

ஈரானின் அணு ஆயுத செயல்பாடுகளை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், அந்நாட்டுடன் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 6 நாடுகள் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்றை கடந்த 2015–ம் ஆண்டு ஏற்படுத்தின.

ஒபாமா காலத்தில் செய்யப்பட்ட இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்க நலன் கருத்தில் கொள்ளப்படவில்லை என தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் கூறி வந்தார்.

இதன் காரணமாக இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக கடந்த ஆண்டு மே மாதம் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.

இதன் மூலம் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்க வழி கிடைத்தது. அதன் படி ஈரான் மீது அதிகமான பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தது. இது ஈரானின் பொருளாதாரத்தை பின்னுக்கு தள்ளியது.

இதனால் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான உறவு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையில் கடும் மோதல் போக்கு நீடிக்கிறது.

இந்த பதற்றமான சூழலில் ஈரானை அச்சுறுத்தும் வகையில் அமெரிக்கா தனது போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும், தளவாடங்களையும் மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பியது.

ஈரான் மூலம் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க வீரர்களுக்கு ஆபத்து நேரலாம் என்ற எதிர்பார்ப்பில்தான் போர்க்கப்பல்கள், போர் விமானங்கள், தளவாடங்களை அனுப்பியதாக அமெரிக்கா நியாயப்படுத்தியது.

ஆனால் ஈரான் இதனை மறுத்ததோடு அமெரிக்காவின் செயல் முட்டாள்தனமானது எனவும் கூறியது. ஈரான் மீது அமெரிக்கா கொடுக்கும் தொடர் அழுத்தங்கள் போருக்கு வழிவகுக்கும் என ஈரான் அதிபர் ஹசன் ருஹானி தெரிவித்தார். அதே சமயம் ஈரான், அமெரிக்காவுடன் போருக்கு வந்தால் அந்த நாடு அழிந்துவிடும் என டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.

அத்துடன் மத்திய கிழக்கு பகுதிக்கு கூடுதலாக 1,500 ராணுவ வீரர்களை அனுப்ப முடிவு செய்துள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் நேற்று முன்தினம் அறிவித்தது. இது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க போர்க்கப்பல்களை ரகசிய ஆயுதங்கள் மூலம் கடலுக்கு அடியில் மூழ்கடித்து விடுவோம் என ஈரான் ராணுவ ஆலோசகர் மோர்டாசா குர்பானி மிரட்டி உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘இந்த பிராந்தியத்துக்கு அமெரிக்கா போர் கப்பல்களை அனுப்பி இருக்கிறது. அவர்கள் சிறிதளவு முட்டாள்தனமாக நடந்து கொண்டாலும் அவர்களின் போர்க்கப்பல்களை, வீரர்களோடு கடலுக்கு அடியில் மூழ்கடித்து விடுவோம். எங்களது 2 ஏவுகணைகள் அல்லது ரகசிய ஆயுதங்கள் இதனை கச்சிதமாக செய்துமுடிக்கும்’’ என குறிப்பிட்டார்.