நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 25 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் சில ஆண்டுகளாக நைஜீரிய அரசினை எதிர்த்து போகோ ஹராம் பயங்கரவாதிகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமைப்பின் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதல்களில் 20,000 பேர் உயிரிழந்துள்ளனர். 2 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில் நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ராணுவ தளம் அருகில் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். 4 துப்பாக்கி டிரக்குகள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் வந்து தாக்கினர்.
இந்த தாக்குதலில் 25 ராணுவ வீரர்கள் உள்பட பொதுமக்கள் பலரும் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியானது. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
போகோ ஹராம் அமைப்பு ஆப்பரிக்காவின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த அமைப்பு 2009ம் ஆண்டு நைஜீரியாவின் அரசினை எதிர்த்து உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.