வடமராட்சியில் நூற்றுக்கணக்கான சிறார்களின் ஆரம்ப கல்விக்கு ஆப்பு!

517 0

வடமராட்சியின் புற்றளை பகுதியிலுள்ள முன்பள்ளியொன்றை கல்வித்திணைக்கள அதிகாரிகள் இழுத்து மூட முற்பட்டுள்ளமை பெற்றோரிடையே சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.

குறித்த சித்திவிநாயகர் முன்பள்ளிக்கான முகாமைத்துவ குழுத்தெரிவில் முன்பள்ளி வடமராட்சி கல்வி வலயத்தை சேர்ந்த உதவிக்கல்விப்ணிப்பாளர் குழப்பங்களை திட்டமிட்டு ஏற்படுத்தியதன் தொடர்ச்சியாக தற்போது இழுத்து மூடும் சதியில் ஈடுபட்டுள்ளதாக பெற்றோர் சார்பில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

அவர் முன்பள்ளியை இழுத்து மூடுவதில் முனைப்பு காட்டுவதற்கான ஆதாரங்கள் இருப்பதாக பெற்றோரால் வடமராட்சி வலயக்கல்வி பணிப்பாளருக்கு முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணை நடாத்தி சரியான முடிவினை தருமாறு பெற்றோரால் வலயக்கல்வி பணிப்பாளரிடம் கேரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பெற்றோர் சமுதாயத்தின் கல்வி வீழ்ச்சிக்கான காரணங்களாக தொடர்ந்தும் யுத்தத்தினை காரணம் காட்ட முடியாது. மாறாக ஒரு சில அதிகாரிகளின் பிழையான வழிகாட்டல், நடுநிலைமை தவறுதல், தகுதியானவர்கள் நியமிக்கப்படாமை என்பன இவற்றிற்கான காரணமாக காணப்படுகின்றது. புற்றளைச் சித்தி விநாயகர் முன்பள்ளியில் அண்மைக்காலமாக முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர் பிள்ளைகளின் கல்வியை நேரடியாக பாதிக்கும் வகையில் நடந்து கொண்டமை, கல்விப்பணிப்பாளரின் அனுமதி இன்றி சட்டவிரோதமாக புதிய ஆசிரியரை நியமிக்க முயன்றமை,முன்பள்ளியினை மூட வேண்டும் என ஒரு சில தவறானவர்களின் வழிகாட்டலின் உதவியுடன் முயற்சிகளை முன்னெடுக்கின்றமை, தற்போது உள்ள நாட்டு நிலைமையில் பிள்ளைகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்காமை,தனது சொந்த கோபங்களை சிறுவர் மீது காட்டி அதிகார துஷ்பிரயோகம் செய்கின்றமை, பிள்ளைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பிழையான வழிகாட்டலை வழங்குகின்றமை போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

குறிப்பாக பெற்றோர் தலைமையிலும் ஆசிரியர் தலைமையிலும் குறித்த முன்பள்ளி இயங்கி வந்தது. இன்று வரை முன்பள்ளியானது பெற்றோரினதும் நலன்விரும்பிகளினதும் செயற்பாடுகளினாலேயே வளர்ச்சியடைந்தும் வருகின்றது.

தற்போது பள்ளியை மூடுமாறு செயற்படுபவர்களின் உள்நோக்கம் முன்பள்ளியை நன்றாக நடாத்துவது அல்ல. எமது முன்பள்ளி செயற்பட வைப்பதன் மூலமே அனைத்து மட்டத்திலுமுள்ள நூற்றுக்கணக்கான சிறார்கள் ஆரம்ப கல்வியை பெறமுடியும். எந்த ஒரு நிறுவனத்தின் கீழும் இல்லாமல் முன்பள்ளியை ஆகக்குறைந்தது நேரடியாக வலயக்கல்வி அலுவலகத்தின் மேற்பார்வையில் நடைபெற வழி வகுத்து தருமாறு பெற்றோரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.