தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி துரோகமிழைத்து விட்டார் – அடைக்கலநாதன்

482 0

தமிழ் மக்களுக்கு  ஜனாதிபதி துரோகமிழைத்து விட்டார் என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு பத்து வருடங்கள் நிறைவடைந்தும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு நாடளாவிய ரீதியில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்தோடு பல்வேறு தரப்பினராலும் பல கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இருந்தும் இவை எவற்றுக்குமே செவி சாய்க்காத ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது ஞானசார தேரரை விடுதலை செய்துள்ளார்.

இதனை சுட்டிக்காட்டி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து கூட்டமைப்பு எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நீதிமன்றத்தை அவமதிக்க குற்றச்சாட்டில் சிறை தண்டனை வழங்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஏன் அரசியல் கைதிகளை விடுக்க முடியாது என்பதே எமது கேள்வியாகும். இதன் மூலம் ஜனாதிபதியை நன்றி மறந்தவராகவே கருதுகின்றோம்.

தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் குறித்து நேரடியாகவும், எழுத்து மூல கடிதங்கள் கோரிக்கைகளுக்கூடாகவும் வலியுறுத்தியிருக்கின்றோம். ஆனால் ஜனாதிபதி சிறிசேன எதனையும் கவனத்தில் கொள்ளவில்லை. இதில் அவர் பாரா முகமாகவே செயற்பட்டார்.

எனவே இது குறித்து பாராளுமன்றத்திலும் நாம் வலியுறுத்துவோம். அத்தோடு ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனுமதி கோரியுள்ளோம். அவர் அதற்கான நேரத்தை ஒதுக்கித் தரும் போது இந்த விடயம் தொடர்பில் வலியுறுத்துவோம் என்றார்.