அவசரகால சட்டத்தின் கீழ் வடக்கில் நடக்கும் மோசமான சோதனை செயற்பாடுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தென்னிலங்கையை விடவும் வடக்கில் இவ்வாறு மோசமான சோதனைகள் இடம் பெறுகின்றமைக்கான காரணம் என்ன என சபையில் தமிழ் தேசிய கூட் டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, கேள்வி எழுப்பினார்.
அவசரகால சட்டத்தை நீடிக்கும் ஜனாதிபதியின் யோசனைக்கு வன்மையான கண்டனத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்துவதாகவும் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அவசரகால சட்டத்தை நீட்டிக்கும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டர்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
அவசரகால சட்டத்தை மீண்டும் ஒரு மாதம் நீடிக்கும் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பினை இலங்கையில் அழித்தொழிக்க முன்னெடுக்கும் வேலைத்திட்டத்துக்காக இது கொண்டுவரப்படுவதாக ஜனாதிபதி கூறியுள்ளார். அதற்கான அவசரகால பிரகடனமொன்றை வெளியிட்டுள்ளார்.
இது கடந்த 24 ஆம் திகதி தான் வர்த்தமானியில் வெளிவந்தது. இதில் முன்பு வேண்டாம் என கைவிடப்பட்ட விதிகள் இப்போது மீண்டும் அவசரகால் சட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன. அவசரகால சட்டம் கொண்டுவருவது என்றால் முதலில் அவர் பாரளுமன்ற கட்சிகளை அழைத்து பேசியிருக்க வேண்டும். இன்றுவரை அதை அவர் செய்யவில்லை.
எமது தமிழ் பிரதேசங்களை பொறுத்தவரை இந்த அவசரகால சட்டத்தின் மூலம் நீண்ட காலமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டது எமது மக்களாவர். வடக்கு பகுதியில் உள்ள பிரச்சினை ஏனைய பகுதிகளின் பிரச்சினையை போன்று அல்ல. தென்னிலங்கையில் மேற்கொள்ளாத சோதனை நடவடிக்கைகள் வடக்கில் இடம்பெறுகின்றன. வடக்கில் தான் மிக அதிகமாகவும் மிகவும் மோசமாகவும் சோதனைகள் இடம்பெறுகின்றன.
எமது மாணவர்கள் பாடசாலைகளில், பஸ்களில் பரிசோதிக்கப்படுவதுடன் இன்னும்பல சோதனைகள் இடம்பெறுகின்றன. ஏன் இராணுவ அளவுக்கு அதிகமாக குவிக்கப்பட்டனர், ஏன் சோதனை நடக்கின்றன என்ற காரணிகளை தெரியாத சிறு பிள்ளைகள் இன்று பாரிய நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்துள்ளது. உண்மையில் இந்த சோதனைகளுக்கு ஒரு விதிமுறையும் கட்டுப்பாடும் இருக்க வேண்டும். இது குறித்து ஜனாதிபதி ஆரம்பத்தில் ஆராய்ந்திருந்தால் இவ்வாறு பிரச்சினைகள் ஏற்படாது இருந்திருக்கும். இன்றிலிருந்தாவது பாடசாலைகள் பரிசோதிக்கப்படுவது குறித்த முன் அறிவித்தலை விடுக்கப்பட வேண்டும். எமது மாணவர்களை நெருக்கடிக்கு தள்ள முடியாது.
ஞானசார தேரரின் விடுதலை
நீதிமன்றத்தை அவமதித்த ஞானசார தேரரை விடுவிக்க முடியும் என்றால் நீண்ட காலமாக பயங்கரவாத சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது தமிழ் இளைஞர்கள் விடுவிக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து நாம் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றோம். ஏன் இதற்கு செவிமடுக்க முடியவில்லை. அவசரகால சட்டம் நீக்கப்பட வேண்டும் என சர்வதேச ரீதியாக கோரப்பட்டும் இன்றுவரை அதனை கவனத்தில் கொள்ளாது தாம் விரும்பிய வகையில் கையாள்வது மோசமானது. ஒரு பொருத்தமான சட்டம் கொண்டுவர வேண்டும்.
இன்றைய சூழலுக்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும். அவசரகால சட்டத்தை நாம் வன்மையாக எதிர்க்கின்றோம். இன்று எமது தீர்வு விடயங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அரசியல் தீர்வு குறித்து எவரும் பேச தயாராக இல்லை.
இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் பல விடயங்களுக்கு நாம் ஆதரவு தெரிவித்துள்ளோம். இஸ்லாமிய பயங்கரவாத செயற்பாடுகளை நாம் ஆதரிக்கவில்லை. இதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாம் முழுமையாக ஆதரவு தெரிவிக்கின்றோம். இந்த அவசரகால சட்டம் இருக்கும் வரையில் எமது பிரதேசங்களும் கட்டுப்பாட்டில் இருக்கப்போகின்றன. ஆகவே இதனை நாம் ஆதரிக்க முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பு அவசரகால சட்டத்தை நீடிக்க ஆதரவு இல்லை. இதனை நீக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடகும். . இதனை எதிர்த்தே நாம் செயற்படுவோம் என்றார்.