நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான ஆவணங்களில் நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டதையடுத்து நேற்று அவர் விடுவிக்கப்பட்டிருக்கின்றார்.
நீதிமன்றை அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அனைத்து குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் அவரை குற்றவாளியாக கண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு 19 வருடகால சிறைத் தண்டனை விதித்து கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி தீர்ப்பளித்திருந்தது. நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விதிக்கப்பட்ட இந்த சிறைத் தண்டனையை ஆறு வருடங்களில் அனுபவிக்கவேண்டும் என்று அப்போதைய மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதியும் தற்போதைய உயர் நீதிமன்ற நீதியரசருமான ப்ரீதி பத்மன் சூரசேன மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் கட்டளையிட்டிருந்தது.
2016ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற தனக்கு சம்பந்தமே இல்லாத வழக்கொன்றில் ஆஜராகி நீதிமன்றின் கௌரவம், மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு சவால் விடுத்தமையின் மூலம் மன்றை அவமதித்தமை, எக்னெலியகொட காணாமல் ஆக்கப்பட்டமை குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அதனை நெறிப்படுத்திய அரச சிரேஷ்ட சட்டவாதி திலீப பீரிஸை முறையற்ற வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி திட்டி அவமானப்படுத்தியமை, நீதிமன்ற கட்டளைக்கு செவிசாய்க்காமை, நீதிமன்ற சுயாதீன தன்மைக்கு சவால் விடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் அரசியலமைப்பின் 105 ஆவது அத்தியாயத்திற்கு அமைவாக சட்டமா அதிபரினால் ஞானசார தேரருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
இந்த நான்கு குற்றச்சாட்டுக்களும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு முதலாம் இரண்டாம் குற்றங்களுக்கு தலா நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையும் மூன்றாம் குற்றத்திற்கு ஆறுவருட கடூழிய சிறைத்தண்டனையும் நான்காவது குற்றத்திற்கு ஐந்து வருட கடூழிய சிறைத்தண்டனையுமாக மொத்தம் 19 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன் அதனை ஆறுவருடங்களில் அனுபவிக்கவேண்டுமென்றும் உத்தரவிட்டது.
இந்த கடூழிய சிறைத்தண்டனையை பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் அனுபவித்து வந்த நிலையிலேயே தற்போது அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைத் தண்டனை பெற்றதையடுத்து அவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவேண்டுமென்று பல தரப்பினரும் கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர். முன்னாள் நீதியமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயதாஸ ராஜபக் ஷ இந்த விடயம் தொடர்பில் பல தடவைகள் பகிரங்கமாக வலியுறுத்தி வந்தார். கடந்த சுதந்திர தினத்திற்கு முன்னர் ஞானசார தேரரை விடுவிக்கவேண்டுமென்றும் அவர் கோரியிருந்தார்.
இதேபோன்றே மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி உட்பட பல முக்கியஸ்தர்கள் சிறைச்சாலையில் ஞானசார தேரரை சென்று பார்த்து பேசியதுடன் அவரை விடுவிக்கவேண்டியதன் அவசியம் தொடர்பிலும் வலியுறுத்தியிருந்தனர். இதனைவிட பொதுபலசேனா உட்பட பல பௌத்த பேரினவாத அமைப்புக்கள் ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தன. பல போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டிருந்தன.
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் தேரரின் விடுதலை தொடர்பாக கருத்துக்களை தெரிவித்திருந்தனர். பெருமளவானோர் இந்த விடயத்தில் எதிர்ப்புக்களை தெரிவிக்காத நிலையில் சாதகமான கருத்துக்களையே கூறிவந்திருந்தனர்.
இந்த நிலையில்தான் தற்போது ஒன்பது மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்த நிலையில் ஞானசார தேரர் விடுவிக்கப்பட்டிருக்கின்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த செயற்பாடானது பெரும் சர்ச்சைகளை தற்போது ஏற்படுத்தியிருக்கின்றது. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்தவொரு தண்டனை பெற்ற கைதிக்கும் பொதுமன்னிப்பு அளிக்க முடியும். அரசியலமைப்பில் அது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆனால் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியது சரியா தவறா என்ற சர்ச்சை தற்போது எழுந்திருக்கின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் பொதுபலசேனா அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் செயலாளராக பதவிவகித்த கலகொட அத்தே ஞானசார தேரர் சிறுபான்மையின மக்களுக்கு அதுவும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான செயற்பாட்டினை மேற்கொண்டிருந்தார். இவரது தலைமையிலான பொதுபலசேனா அமைப்பினர் முஸ்லிம் மக்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்ததுடன் அவர்களை தீவிரவாத கண்ணோட்டத்துடன் பார்த்து வந்தனர்.
கடந்த ஆட்சிக்காலத்தில் தம்புள்ளை பள்ளிவாசல் முதல் கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் வரை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஹலால் பிரச்சினை பூதாகரமாக்கப்பட்டு முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகளும் அரங்கேற்றப்பட்டிருந்தன. அளுத்கம, தர்காநகர், பேருவளை பகுதிகளில் முஸ்லிம் மக்களை இலக்குவைத்து வன்முறை இடம்பெற்றிருந்தது. பொதுபலசேனா அமைப்பினர் அங்கு திட்டமிட்டவகையில் கூட்டம் நடத்த முயன்றதையடுத்தே இந்த வன்முறை ஏற்பட்டிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இதேபோன்றே முஸ்லிம் மக்களுக்கு எதிரான பல்வேறு செயற்பாடுகளில் பொதுபலசேனா உட்பட பல பேரினவாத அமைப்புக்கள் கடந்த ஆட்சியில் செயற்பட்டு வந்திருந்தன. முஸ்லிம் தீவிரவாதத்திற்கு எதிராக தாம் போராடுவதாக தெரிவித்தே பொதுபலசேனா அமைப்பினர் அப்போது செயற்பட்டு வந்தனர்.
இந்த பின்னணியில்தான் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதையடுத்து பொதுபலசேனா அமைப்பினரின் செயற்பாடுகள் ஓரளவிற்கு கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது. ஆனாலும் நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்று இரண்டு வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் கலகொட ஞானசார தேரர் தலைமையிலான பொதுபலசேனாவினரது செயற்பாடு தீவிரமடைந்திருந்தது.
இந்த நிலையிலேயே நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு இலக்கான ஞானசார தேரர் சிறைக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. முஸ்லிம்களிடையே தீவிரவாதம் வளர்ந்து வருவதாக பொதுபலசேனா அமைப்பினர் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வந்தனர். இதனால் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளிலும் அவர்கள் ஈடுபட்டு வந்தனர்.
தற்போது உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை அடுத்து பொதுபலசேனாவினரது அன்றைய செயற்பாடு சரியானது என்ற பார்வை பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் தற்போது ஏற்பட்டிருக்கின்றது. அதனை கருத்தில் கொண்டுதான் கடந்த வெசாக் தினத்தன்று கைதிகளின் விடுதலை நிகழ்வுக்காக வெலிக்கடை சிறைச்சாலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஞானசார தேரரை சந்தித்துப் பேசியதுடன் அவரை விடுவிப்பதற்கான நடவடிக்கையை எடுத்திருக்கின்றார்.
பொதுமன்னிப்பளித்து ஜனாதிபதி ஞானசார தேரரை விடுவித்துள்ள விடயமானது நீதித்துறைக்கும் நிறைவேற்று அதிகாரத்திற்குமிடையில் மீண்டும் முரண்பாட்டை ஏற்படுத்திவிடுமோ என்ற கேள்வியும் எழுந்திருக்கின்றது. ஜனாதிபதியின் இந்த செயற்பாட்டுக்கு எதிராக சிரேஷ்ட சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு நீதிமன்றத்தை நாடுமிடத்து நீதித்துறைக்கும் நிறைவேற்று அதிகாரத்திற்குமிடையில் முரண்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனாலும் அரசியல் அமைப்பின் கீழ் ஜனாதிபதிக்கு எவருக்கும் பொதுமன்னிப்பு வழங்க அதிகாரமுள்ளமையினால் பெரும் இழுபறி நிலை ஏற்படப்போவதில்லை. ஆனாலும் ஞானசார தேரரின் விடயத்தில் ஜனாதிபதியின் செயற்பாடு நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை கேள்விக்குட்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
இனவாத, பேரினவாத சக்திகளுக்கு ஊக்கமளிக்கும் செயற்பாடாகவே இது அமைந்திருக்கின்றது. இந்த முன்னுதாரணமானது எதிர்காலத்தில் இன மதங்களுக்கிடையில் விரிசல்களை ஏற்படுத்துவதற்குக்கூட காரணமாக அமையலாம். பேரினாத சக்திகளுக்கு ஆதரவளிப்பது என்பது நாட்டின் தேசிய ஒற்றுமைக்கு ஒருபோதும் உதவப்போவதில்லை என்பதை அரசியல் தலைமைகள் உணர்ந்துகொள்வது நல்லது.