காணாமல் ஆக்கப்பட்டவர்களில் அதிகளவான சாட்சிகளைக் கொண்ட ஒருவர் குறித்து விசாரித்து நல்ல தீர்வைத் தந்தால் இதுகுறித்த அலுவலகத்தை நம்புவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடக சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் செயலாளர் லீலாவதி ஆனந்தநடராஜா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

அவர் தெரிவிக்கையில், “கடந்த 16ஆம் திகதி கொழும்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இது குறித்து கொழும்புக்கு சென்று குறித்த அலுவலக அதிகாரிகளை சந்தித்து எமது ஆட்சேபனையை தெரிவித்தோம்.

 

அவர்களிடம் காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகத்தை நாம் நம்பவில்லை என குறிப்பிட்டோம்.

ஆனால், குறித்த அலுவலகத்தின் ஊடாக வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் செய்யப்பட்டவர்கள் குறித்து அதிகளவான சாட்சிகளைக் கொண்ட ஒருவர் சார்பில் வழக்கு ஒன்றை மேற்கொண்டு, அதன் ஊடாக நல்ல தீர்வொன்றை பெற்றுத் தந்தால் நாம் குறித்த அலுவலகத்தை நம்புவதாக அவர்களிடம் தெரிவித்தோம். விரைவில் அவ்வாறான நடவடிக்கை ஒன்றை எடுப்பதாக அவர்கள் எம்மிடம் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த சந்திப்பைத் தொடர்ந்து அமைச்சர் மனோ கணேசனை சந்தித்தோம். அவரிடம் இரகசிய முகாம்கள் இருப்பது குறித்து தெரிவித்தோம். அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு மாதாந்தம் 6000 ரூபா வழங்குவது என்பது போராட்டத்தை பலவீனப்படுத்தும் செயல் எனவும், அதனை கட்டாயமாக வழங்கக் கூடாது என நாம் வலியுறுத்தினோம். குறித்த பணத்தினை கட்டாயப்படுத்தி வழங்க மாட்டோம் என அமைச்சர் இதன்போது வாக்குறுதியளித்தார்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.