14 நாட்களுக்குள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன் – வசந்தகுமார்

294 0

பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளதால் 14 நாட்களுக்குள் சட்டரீதியாக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக வசந்தகுமார் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எச்.வசந்தகுமார், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். நான் கூறிய அனைத்து திட்டங்களும் இன்னும் ஒரு வருடத்துக்குள் நிறைவேற்றப்படும்.

பாராளுமன்றத்தில் நாங்கள் மக்களுக்காக குரல் கொடுத்து கொண்டேதான் இருப்போம். மக்களின் குறைகளை நிறைவேற்ற வேண்டியது மத்திய அரசின் கடமை. நிறைவேற்றவில்லை என்றால் நிச்சயம் தட்டி கேட்போம். சட்டமன்ற உறுப்பினராக உள்ள நான், பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளதால் 14 நாட்களுக்குள் சட்டரீதியாக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன்.

கூட்டணி கட்சிகள் அனைத்தும் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கில்தான் மு.க.ஸ்டாலின் கூட்டணி அமைத்தார். பா.ஜனதாவை எதிர்ப்பது மட்டும் எங்கள் நோக்கம் அல்ல. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஒரே நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.