உயிர் இழந்த 12 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் – எடப்பாடி பழனிசாமி உத்தரவு

334 0

வெடி விபத்து மற்றும் விஷ வாயு தாக்கி உயிர் இழந்த 12 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் விநாயகா நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதியன்று தனது வீட்டில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கியபோது, விஷ வாயு தாக்கி உயிர் இழந்தார். அவரை காப்பாற்றச் சென்ற அவருடைய மகன்கள் கார்த்தி மற்றும் கண்ணன், திருநெல்வேலியை சேர்ந்த பரமசிவம், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுரதாபிசி மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த லட்சுமிகாந்தன் ஆகிய 5 பேரும் உயிர் இழந்தனர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகா மன்னை நகரில் தனியார் வெடிபொருள் உற்பத்தி கூடத்தில் கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில், பணியில் ஈடுபட்டிருந்த மன்னார்குடியை சேர்ந்த சிங்காரவேல், வீரையன், மோகன், பாபு, சுரேஷ் மற்றும் அறிவுநிதி ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

அவர்கள் மரணமடைந்த செய்தியை அறிந்து மார்ச் 27-ந் தேதியன்றே இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தேன். வெடிவிபத்து மற்றும் விஷ வாயு தாக்கி உயிர் இழந்த 12 பேரின் அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவர்களது குடும்பத்தினரின் வறிய நிலையை கருத்தில் கொண்டு, உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.