மன்னார் பொலிஸார் மற்றும் கடற்படை வீரர்கள் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது உரிய அனுமதிப் பத்திரம் இல்லாமல், கடல் சங்குகளை வாகனத்தில் ஏற்றிச் சென்ற நபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, தாராபுரம் சந்தியில் உள்ள வீதி தடையில் வைத்து குறித்த வாகனம் சோதனைக்குட்படுத்தப்பட்ட போதே உரிய அனுமதிப்பத்திரம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட சங்கு மூடைகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த வாகனத்தில் இருந்த மூடைகளில் இருந்து 2,500 சங்குகள் மீட்கப்பட்டுள்ளதுடன் வாகனத்தின் சாரதியும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பேசாலையில் இருந்து மன்னாருக்கு சங்குகளை கொண்டு செல்லும் போதே கைதுசெய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் பேசாலையைச் சேர்ந்தவர் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதுடன் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட சங்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளுக்காக சந்தேகநபர் மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.