தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் நோக்கில் வடக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள பௌத்த மற்றும் சிங்கள மயமாக்கலுக்கு எதிராகவும், தமிழ் மக்களின் உரிமைகளையும் வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் கடந்த செப்டெம்பர் 24 ஆம் திகதி நடத்தப்பட்ட எழுக தமிழ் பேரணியே நாட்டின் அமைதியைக் குழப்பியுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராஜசிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வடக்கில் எழுக தமிழ் பேரணியை அடுத்து, தென்னிலங்கையில் எழுக சிங்களம் என்று பேரணி நடத்தப்பட வேண்டும் என்று பெங்கமுவே நாலக்க தேரர் போன்ற சிங்கள மதத் தலைவர்கள் வலியுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கமத்தொழில் வாரத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் மட்டக்களப்பு மண்டூர் கமநல சேவைகள் நிலையத்தில் மண்டூர் கமநல சேவைகள் உத்தியோகஸ்தர் கோ. ஜெயகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராஜசிங்கம், அமைதியை குழப்புவதற்கு கல்லொன்று எறிந்தால் போதும் எனக் குறிப்பிட்டார்.
இதனால் தமிழ் தலைமைகள் மிகவும் பக்குவமாகவும் நிரானமாகவும் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் அனைத்து மக்களும், சமாதானமாக வாழ வேண்டும் என்றால் தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ள அரசியல் யாப்பு சரியான முறையிலே உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள அவர், இதனை தமது தலைவரான இரா. சம்பந்தன் தலைமையிலான அணி மிகவும் பக்குவமாக அணுகி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அமைதியான நேரத்தை குழப்புவதற்கு கல்லொன்று எறித்தால் போதும் எனக் குறிப்பிட்ட அவர், அமைதியைக் குழப்புவதற்கு இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறக்கூடாது என்றும் இதற்காக எமது தலைமைகள் மிகவும் பக்குவமாகவும் நிதானமாகவும் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாங்கள் நீந்திவந்த நெருப்பு ஆறு எமது பிள்ளைகளுக்கு தெரியக்கூடாது, அவர்கள் இந்த நாட்டில் சமாதானமாக வாழ வேண்டும் என்றால் தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ள அரசியல் யாப்பு சரியான முறையிலே உருவாக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்பொழுதுள்ள சமாதான நிலைமை நீடிக்க வேண்டும் என்றால் பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வியை எவ்வாறு கட்டியெழுப்ப வேண்டுமென்பதை சிந்திக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம், கமநல அபிவிருத்தி பிரதி திணைக்கள ஆணையாளர் என். சிவலிங்கம் மற்றும் பாடசாலை மாணவர்கள் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் விவசாயிகள் என பலரும் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விவசாய அமைப்புகளுக்கு நிதி உதவிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், புலமைப் பரிசில் பரீட்சையில் 154 புள்ளிகளை பெற்ற மாணவியும் இந்த நிகழ்வில் பாராட்டி பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டது.