ஸ்ரீலங்கன் விமானசேவையின் முக்கிய பதவிக்கு 30 இலட்சம் மாத கொடுப்பனவினை வழங்கி அமெரிக்க பிரஜையொருவரை நியமிப்பதற்கான காரணம் என்ன? எமது நாட்டில் இப்பதவிக்கு தகுதியானவர்கள் கிடையாதா? மத்திய வங்கியின் ஆளுநராக சிங்கப்பூர் பிரஜையான அர்ஜுன மகேந்திரனை நியமித்து மத்திய வங்கியின் பிணைமுறிகள் கொள்ளையடிக்கப்பட்டன. தற்போது நட்டத்தில் இயங்குகின்ற ஸ்ரீ லங்கன் விமான சேவையினையும் கொள்ளையடிக்க முயற்சிகள் இடம் பெறுகின்றன என எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
பாரிய நட்டத்தில் இயங்குகின்ற ஸ்ரீ லங்கன் விமான சேவையினை முழுமையாக இல்லாதொழிப்பதற்கான செயற்பாடுகள் இடம் பெறுகின்றன. விமான சேவை நிறுவனத்தின் முக்கிய பொறுப்பிற்கு அமெரிக்க பிரஜையொருவரை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவருக்கு மாத கொடுப்பனவு 30 இலட்சம் வழங்கப்படவுள்ளது.
இந்த நபர் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன. ஆப்கானிஸ்தான் விமான சேவை நிறுவனத்தில் முறையற்ற செயற்பாடுகளை மேற்கொண்டு நிறுவனத்தை பாரிய நட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார். பிற நாட்டு பிரஜைகளை முக்கிய பதவிகளுக்கு நியமிக்கும் போது எமது நாட்டு பிரஜைகள் அவமதிக்கப்படுவார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.