சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை தாமே படுகொலை செய்ததாக உரிமை கோரி, கடிதமொன்றை எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்ததாக கூறப்படும் முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரியின் கையடக்க தொலைபேசியின் பதிவுகள் மர்மமான முறையில் அழிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளன.
இதனால் அவரது மரணம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதால் இரகசிய பொலிசார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2007ஆம் ஆண்டு இராணுவத்தில் இருந்து ஒய்வுபெற்ற 52 வயதான இளந்தாரிகே ஜயமான்ன என்ற குறித்த அதிகாரி நேற்றுமுன்தினம் அவரது வீட்டின் சமயலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தார்.
லசந்த விக்ரமதுங்கவை தாமே கொலை செய்ததாக அவரது சடலத்திற்கு அருகில் கடிதமொன்றும் காணப்பட்டது. இந்த நிலையில் குறித்த கடிதம் இரசாயன பகுப்பாய்விற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
குறித்த கடிதத்தில் உள்ள கையெழுத்து தனது தந்தையின் கையெழுத்து போன்றே உள்ளதாக இளந்தாரிகே ஜயமான்னவின் மூத்த புதல்வர் கூறியுள்ளார்.
எனினும் இந்த கடிதத்தில் உள்ள கையெழுத்து குறித்த இரசாயன பகுப்பாய்வு அறிக்கை நாளைய தினமே கிடைக்கும் என பொலிசார் அறிவித்துள்ளனர்.
இரகசிய பொலிசாருக்கு எழுதப்பட்ட குறித்த கடிதத்தில் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள நபர் தனது நண்பர் எனவும் அவர் லசந்தவை கொலை செய்யவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் தற்கொலை செய்ததாக கூறப்படும் முன்னாள் இராணுவ அதிகாரி எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த பெயருக்கும் லசந்தவின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நபரின் பெயருக்கும் வேறுபாடுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 11 ஆம் திகதி காணாமல் போயிருந்த ஜயமான்ன 13 ஆம் திகதி இரவே வீடு திரும்பியிருந்ததுடன், தான் சென்ற இடம் குறித்து குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இந்த நிலையில் ஜயமான்னவின் கையடக்கத் தொலைபேசியிலுள்ள குறுந்தகவல்கள் மற்றும் தொலைபேசி அழைப்பு விபரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
எனினும் இந்த தகவல்களை தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்கொலை செய்வதற்கு முன்னர் அவர் எங்கு சென்றார் மற்றும் யாரை சந்தித்தார் என்ற தகவல்களை கண்டறிய வேண்டியுள்ளதாக விசாரணையை மேற்கொள்ளும் அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது மிகவும் முன்னேற்றகரமான நிலையிலுள்ள லசந்த விக்ரமதுங்கவின் விசாரணைகளை திசைதிருப்பும் வகையில் இந்த தற்கொலை சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.