“முள்ளிவாய்க்கால் என்பது எமக்கும் முடிவல்ல”
எம் மனங்களில் தமிழினப்படுகொலை நாள் எனும்போது “மே-18”ல், முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலையையே முன்னிறுத்தி நிற்கின்றது. ஆனால் முள்ளிவாய்க்கால் என்பது எமக்கும் முடிவல்ல ஆட்சிக்குவரும் ஒவ்வொரு சிங்கள ஆட்சியாளருக்கும் அது முடிவல்ல என்பதையும் அது பறைசாற்றி நிற்கின்றது. ஏனென்றால் விடியலைத் தேடிய எமது ஆயுதவழிப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டு, எம்மினத்தின் விடியலைத் தடுக்க முடியாத போராட்டமாக அது ஆழவே வேரூன்றிவிட்டதால் போராட்டங்கள் தொடர்ந்தே செல்கின்றது. ஆனால், அதிகாரத்தைக் கைப்பற்றி ஆட்சியில் அமரும் ஒவ்வொரு சிங்களவனும் தனிச்சிங்களத்தையே விரும்புவதால் இன அழிப்பென்பது நடைபெற்றுக் கொண்டே செல்லும். இதுதான் முள்ளிவாய்க்காலின் முடிவல்ல என்பதன் வெளிப்பாடு.
1948 இலிருந்து இனவெறியுடன் ஆரம்பிக்கப்பட்ட எமது மக்கள் மீதான படுகொலை 2009இல் மிகவும் மோசமான பேரழிவைச் சந்தித்ததுடன், ஈழத்தில் வாழும் எஞ்சிய தமிழ்மக்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக இருப்பதையே நாம் பார்த்து வருகின்றோம். இந்த மக்களின் நிரந்தரமான, சுதந்திரமான, சுபீட்சமான, நீதியான விடைகளாக இருக்கப் போவது புலம்பெயர்ந்து வாழும் மக்களின் செயற்பாடுகளே!
எனவே இன அழிப்புத் தொடர்ந்தும் நடைபெற, நாம் ஒருபோதும் இடமளியோம் என்பதை வெளிக்காட்டுவதோடு இறுதியாக நடைபெற்ற எம்மக்கள் மீதான கோரமான இனவழிப்பிற்கு ஒரு நிரந்தரமான நீதி கிடைக்கும்வரை தொடர்ந்தும் எமது போராட்டங்களை முன்னெடுத்தே செல்லவேண்டியுள்ளது. அந்தவகையில் ஐரோப்பா ரீதியிலும் பிரான்ஸ் ரீதியிலும் நடைபெற்ற கவயீர்ப்புப் போராட்டங்கள் எமக்குச் சாதகமான பெரும் மாற்றங்களையே தந்துள்ளது.
முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பிற்கு உள்ளாக்கப்பட்ட மக்களை நினைவுகூரும் முகமாக
முள்ளிவாய்க்கால் தமிழனப் படுகொலையின் 10ம் ஆண்டு நினைவுனாள் 18.05.2019 சனிக்கிழமை ஸ்ராஸ்பூர்க் மத்தியப்பகுதியில் பி.ப 3.00 மணி தொடக்கம் மாலை 5மணி வரை நடைபெற்றது.
இந் நிகழ்வில் 100க் கணக்கான மக்கள் உணர்வுடன் கலந்து கொண்டிருந்தனர்.
பிரத்தியேகமாக அமைக்கப் பட்டிருந்த நினைவுக் கல்லின் முன்னிலையில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கமும் செய்யப்பட்டதுடன் படுகொலை நினைவு சுமந்த பதாதைகளைத் தாங்கிய வண்ணம் சிறுவர் முதல் பெரியவர் வரை மிகவும் உணர்வுடன் நின்றிருந்தனர்.
சிறீலங்கா அரசினால் தொடர்ந்து நடாத்தப் பட்டு வருகின்ற தமிழின அழிப்பை தடுத்து நிறுத்தி நீதியைப் பெற்றுத் தரவும் அனைத்துலக விசாரணையை முன்னெடுக்கவும் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தரக்கோரியும் உள்ளடங்கிய மனு ஐரோப்பிய ஆலோசனைச் சபையின் பொதுச் செயலரிடம் கையளிக்கப்பட்டதுடன் தற்போதய நிலைமையில் தமிழ் மக்களின் முக்கிய கடமை பற்றியும், தமிழீழத்தில் மக்கள் எழுச்சிகொண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையை நினைவு கூர்ந்துள்ளதையும், புலம் பெயர்தமிழ் மக்களும், தாயக மக்களும், தமிழக மக்களும் ஒன்றிணைந்து போராடினால் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளமுடியும் என ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் திரு.ந. கிருபானந்தன் அவர்கள் உரையாற்றியிருந்தார்.
இறுதியில் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற முழக்கத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு நிறைவுக்கு வந்தது.