உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் உள்ளூர் தீவிரவாதத்தை அடிப்படையாகக்கொண்டது. அது ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற உலக பயங்கரவாத அமைப்பினால் வழிநடத்தப்பட்டது. பொலிஸ் விசாரணைகளில் இது கண்டறியப்பட்டுள்ளது.
உள்ளூர் தீவிரவாத அமைப்பினரே பயங்கரமான தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களை நன்கு திட்டமிட்ட வகையில் நடத்தி அப்பாவிகளான 250க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றொழித்ததுடன், 500க்கும் மேற்பட்டவர்களை காயமடையச் செய்துள்ளனர்.
தேவாலயங்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் உள்ளவர்களைத் தேடிக்கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், அந்தத் தேடுதல்களின் மூலம் உள்ளூர் தீவிரவாதிகளான பயங்கரவாதிகள் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கின்றார்களா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று ஒரு மாதம் கடந்துவிட்டது. ஆனால், அந்தத் தாக்குதல்களினாலும், அதன் பின் விளைவுகளினாலும் ஏற்பட்ட குழப்ப நிலைமையும், கவலைகளும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களின் கோரம் குறித்த அச்சம் மக்கள் மனங்களிலிருந்து இன்னும் அகலவில்லை. இந்த அச்சம் காரணமாக நாடு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவது கடினமான காரியமாகியுள்ளது.
தேசிய பாதுகாப்பையும், பிராந்திய பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என்ற காரணத்தைக்காட்டி, உலக வல்லரசுகள் இலங்கையில் கால் பதிப்பதற்கு உலக பயங்கரவாதமாகிய இந்த தற்கொலைக்குண்டுத் தாக்குதல்கள் உரிய வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
தென்னாசிய பிராந்தியத்தில் இராணுவ பொருளாதார வல்லமையை வளப்படுத்திக் கொள்வதற்கான போட்டியில் சீனாவும், அமெரிக்காவும் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கின்றன. அந்த போட்டிச் செயற்பாடுகளின் ஓர் அம்சமாகவும், புதிய நகர்வாகவும் அந்த இரண்டு நாடுகளுமே இலங்கையில் ஒரு பாதுகாப்புத் தளத்தை – ஒரு பாதுகாப்பு நிலையை நிறுவுவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. அதற்கான பூர்வாங்க ஒப்பந்த நடவடிக்கைகளும் இடம்பெற்றிருப்பதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.
ஏட்டிக்குப் போட்டியாகச் செயற்படுகின்ற வல்லரசுகளான அமெரிக்காவும், சீனாவும் இந்த சின்னஞ்சிறிய தீவில் நிலைகொள்வதன் மூலம், இரு தரப்புகளுக்கும் இடையிலான கருத்து முரண்பாட்டு நிலைகள், முரண்பாடான செயற்பாடுகள் என்பன இங்கு இடம்பெறும் அதன் ஊடாக பிராந்தியத்தில் பதற்றத்தை உருவாக்கவல்ல உணர்வு நிலையின் உற்பத்தித் தளமாக இலங்கை மாற்றமடைவதற்கான சாத்தியங்கள் உண்டு.
இது நீண்டகால அடிப்படையில் இலங்கை மக்களின் நிம்மதியையும் வளர்ச்சிப் போக்கிலான அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையையும் அச்சுறுத்தலுக்குள்ளாக்க வல்லது. மொத்தத்தில் உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் பிராந்திய வல்லாதிக்க போட்டிக்குள் இலங்கையை வலிந்து இழுத்துச் சென்றிருப்பதையே காண முடிகின்றது. ஜனநாயக நாடாகிய இலங்கைக்கு இந்த நிலைமை மிகவும் ஆபத்தானது என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.
விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதமாகச் சித்தரித்து, அதனை உலக பயங்கரவாதமாக உருவகித்துக்காட்டி, அந்தப் பயங்கரவாதத்தையே அடித்து நொறுக்கி இல்லாமல் செய்துவிட்டதாக இலங்கை அரசு இன்னும் வீரம் பேசிக்கொண்டிருக்கின்றது. ஆனால் அத்தகைய வீரதீர அனுபவத்தைக்கொண்ட அரசாங்கத்தினாலும், அதனுடைய படைகளினாலும், குறிப்பாக புலனாய்வு பிரிவினராலும் உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த முடியாமல் போய்விட்டது.
இந்தத் தாக்குதல்கள் குறித்த எச்சரிக்கைத் தகவல்கள் புலனாய்வு பிரிவினருக்கு முன்கூட்டியே ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகளில் கிடைத்திருந்தபோதிலும், அந்தத் தாக்குதல்களைத் தடுக்கவோ அல்லது அந்தத் தாக்குதல்களின் சேத அளவுகளைக் குறைக்கவோ முடியாத மோசமான தோல்விக்கு இந்த ‘பயங்கரவாத எதிர்ப்பு வீரம்’ ஆளாகி விட்டது. இது பல்வேறு தரப்பினரதும் கண்டனத்திற்கும், அந்த ‘பயங்கரவாத எதிர்ப்பு வீரத்தை’ கேள்விக்குறியோடு நோக்குவதற்கும் வழியேற்படுத்தி உள்ளது.
தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் பற்றிய முன்னெச்சரிக்கைக்கு முன்பே நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாதம் வன்முறை நோக்கில் வளர்ச்சி பெற்று வருவது பற்றிய தகவல்கள் அரசாங்கத்திற்கும், அரச காவல்துறைக்கும், புலனாய்வு பிரிவுக்கும் தாராளமாகக் கிடைத்திருந்தன. இந்தத் தகவல்களை மிதவாத முஸ்லிம் அமைப்புக்களும் முக்கியஸ்தர்களும் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்ததாக விரல் நீட்டி உறுதியாகக் குறிப்பிடுகின்றார்கள்.
ஆனால், இந்த எச்சரிக்கைகள் எல்லாவற்றையுமே காவல்துறையினரும், புலனாய்வுப் பிரிவினரும், ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் உதாசீனம் செய்திருந்ததையே காண முடிகின்றது. அந்த உதாசீனம் குறித்தும், பொறுப்பற்ற தன்மை குறித்தும் அவர்கள் மீது இப்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தத் தோல்வி நிலைமைக்கு இதுவரையிலும் அரசாங்கத் தரப்பிலிருந்து உளப்பூர்வமான பொறுப்பேற்கும் பண்பு வெளிப்படவே இல்லை.
என்ன நடந்தது?
உள்ளூர் இஸ்லாமிய அடிப்படைவாதிகளே உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை துணிகரமாக நடத்தியிருந்தார்கள். அதுவும் இந்த இஸ்லாமிய அடிப்படைவாத கருத்தியலுக்குள் மூழ்கிப் போன விரல்விட்டு எண்ணக்கூடிய சில முஸ்லிம் குடும்பங்களே இந்தத் தாக்குதல்களில் நேரடியாகப் பங்கேற்றிருந்தார்கள். இது விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் உள்ளூர் தலைமகனாகிய மௌலவி சஹ்ரான் ஹாசிம், தனது தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமாத் என்ற தீவிரவாத அமைப்பின் ஊடாக இந்தத் தாக்குதல்களை நெறிப்படுத்தியிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
மூன்று தசாப்தங்களாக நீடித்திருந்த விடுதலைப்புலிகளுக்கும், அரச படைகளுக்கும் இடையிலான யுத்தம் 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்ததையடுத்து, இஸ்லாமிய அடிப்படைவாதம் கிழக்கு மாகாணத்தில் படிப்படியாக வளர்ச்சி பெற்றிருந்தது. இதனை இஸ்லாமிய மிதவாத அமைப்புக்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும், இஸ்லாமிய மதத் தலைவர்களும் விலாவாரியாக விபரித்துக் கூறியுள்ளார்கள்.
இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் கருத்தியல் சார்ந்த வளர்ச்சிக்கு இரண்டு முனைகளில் நிலைமைகள் சாதகமாகவும், தூண்டுதலாகவும் அமைந்திருந்ததாகக் கூறப்படுகின்றது.
இதில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின் பின்னணியில் அரபு நாடுகள் பக்கம் சாய நேர்ந்த இஸ்லாமிய மதம் சார்ந்த உறவு நிலை முதலாவதும், முக்கியமானதுமாகும். குறிப்பாக அரேபியாவுடனான பொருளாதார ஆதரவு மற்றும் சமய ரீதியான அரசியல் நிலை குறிப்பிட்டு கூறத்தக்கது.
இலங்கையின் திறந்த பொருளாதாரக் கொள்கையின் மூலம் கிடைத்த திரைகடலோடி திரவியம் தேடுவதற்கான வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சந்தர்ப்பம் முஸ்லிம்களை கடல் கடந்த முஸ்லிம் அரச ஆதரவு தளத்தை நாடுவதற்கான வழியை ஏற்படுத்தியது. குறிப்பாக அரேபியா தனது செல்வாக்கை இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பரப்புவதற்காக பொருளாதார உதவிகளைக் கருவியாகப் பயன்படுத்தியதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
சவூதி அரேபியாவுக்கு வேலைதேடிச் சென்ற பலரும், வெறுமனே பொருளாதார வாய்ப்புக்களை மட்டும் நாடவில்லை. அந்த நாட்டின் முஸ்லிம் சமய கலாசாரத்தையும், அரேபிய மொழியையும் பின்பற்றுவதில் ஆர்வம் காட்டினார்கள். அந்த ஆர்வம் அரேபியர்களின் நடை, உடை உள்ளிட்ட கலாசாரத்தைப் பின்பற்றுவது ஒரு வகையில் நாகரிக மோகமாகவே அவர்களுடைய மனங்களில் படிந்திருந்தன.
இந்த நாகரிக மோகமே இலங்கை முஸ்லிம்களின் பொருளாதார கேந்திரமாகவும், அவர்களின் சமய மற்றும் வாழ்வியல் கலாசாரத் தலைநகராக உருவகித்து குறிப்பிடப்படுகின்ற காத்தான்குடியின் அதிமுக்கிய நிலைக்களனாக மாற்றம் பெற்றது. அரேபியா நாகரிகத்தையும், பண்பாட்டையும் வாழ்வியல் அடையாளங்களையும் அடையாளப்படுத்துகின்ற பல மாற்றங்கள் இங்கு நிகழ்ந்தன.
மாற்றங்கள்
இந்த மாற்றங்கள், கிழக்கு மாகாணத்தின் பாரம்பரியத்தையும், இந்துக்கள் மற்றும் கத்தோலிக்க மக்களுடன் இசைவான சமூக நிலைப்பாட்டையும் கொண்டிருந்த, முஸ்லிம்களை அந்த பல்லின சமூகப் போக்கிலிருந்து வேறுபடுத்தின. அத்துடன் அரேபிய கலாசாரத்தின் அடியொட்டிய ஒரு சிறிய அரேபிய நகராகவும் காத்தான்குடி மாற்றமடைந்தது.
அரேபிய கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான கட்டிடங்கள், வீடுகள் என்பனவற்றுடன் பேரீச்சம் பழ மரங்கள் நிறைந்த அரேபிய நாட்டு வீதிகளை ஒத்த வகையிலான வீதி அமைப்புக்களையும் காத்தான்குடியில் காணலாம். காத்தான்குடி என்பது கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு நகர்ப்பிரதேச நகர்ப்புறங்களில் ஒன்றாகும். அது முஸ்லிம்களின் ஒரு முக்கிய வாழ்விடமாகும். தமிழ்ப்பிரதேசங்களில் வாழ்கின்ற முஸ்லிம்கள் மதத்தால் வேறுபட்டிருந்தாலும், அவர்கள் தமிழர்கள். தமிழர்களின் வாழ்வியலுடன் இசைந்து வாழ்கின்ற போக்கைக் கொண்டிருப்பார்கள். காத்தான்குடியின் வாழ்வியல் இயல்பும் அத்தகையதே.
ஆனால் அரேபிய சமூக, சமய, கலாசாரம் நிலை சார்ந்த மோகம் செல்வாக்கு பெற்றதன் காரணமாக அந்த வாழ்வியல் நிலைமை மாற்றமடைந்தது. தமிழ் மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் தொன்றுதொட்டு நிலவி வந்த ‘தேங்காய்ப்பூவும் புட்டும்’ போன்ற சமூக உறவின் சமநிலையும் மாற்றமடைந்தது. அத்துடன் இஸ்லாமிய மதத்திற்குள்ளேயே காணப்படுகின்ற பல்வேறு கொள்கைகளின் அடிப்படையிலான மத வழிமுறைகளும் இந்த வாழ்வியல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்குத் துணைபோயிருந்தன. அதேவேளை, முஸ்லிம்களுக்குள்ளே இருந்த பள்ளிவாசலை நிலைக்களனாகக் கொண்ட கட்டுருவான கட்டமைப்பும் இறுக்கமான ஒற்றுமையும் தளர்ந்து போயின. இந்தத் தளர்வுக்கு முஸ்லிம்களின் அரசியல் போக்கில் ஏற்பட்ட மாற்றங்களே முக்கிய காரணமாகக் குறிப்பிடப்படுகின்றது.
முன்னர் பள்ளிவாசல்களின் பரிபாலன சபையினர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாக சமயம் சார்ந்த நியாயமான சமூக நிலைப்பாட்டில் இறுக்கமான பிடிப்பைக் கொண்டிருந்தனர். ஆனால் எல்லா துறைகளிலும் ஊடுருவி செல்வாக்கு செலுத்திய அரசியல் இந்த பள்ளிவாசல் நிர்வாக சபைகளையும் விட்டு வைக்கவில்லை. அந்த சபைகளில் ஊடுருவிய அரசியல் செல்வாக்கு முன்னைய முஸ்லிம் மக்களின் பள்ளிவாசல் சார்ந்த சமூகக் கட்டுக்கோப்பை உடைத்து சின்னாபின்னமாக்கி ஆளுக்கொரு கொள்கை, ஊருக்கொரு நிலைப்பாடு என்ற நிலைமைக்கு இழுத்துச் சென்றது.
பள்ளிவாசல் நிர்வாக சபைகளை முதன்மைப்படுத்திய தலைமைத்துவமும், அதன் வழிகாட்டலிலான கட்டுக்கோப்பும் சிதைவடைந்தமையும் காத்தான்குடியில் அரேபிய நாகரிக மோகம் வளர்ச்சி பெறுவதற்கு சாதகமான நிலைமையை உருவாக்கியிருந்தது. இஸ்லாத்தின் பல்வேறு மதப் பிரிவுகளும்கூட இதற்குத் துணைபோயிருந்தன என்று முஸ்லிம் அறிஞர்கள் கூறுகின்றார்கள்.
இத்தகைய ஒரு பலவீனமான நிலையிலேயே இஸ்லாமிய அடிப்படைவாதம் முஸ்லிம் இளைய சமூகத்தின் மத்தியில் ஆழமாகக் காலூன்றுவதற்கு வழியேற்படுத்தியிருந்தது. இவ்வாறு அந்த அடிப்படைவாதம் காலூன்றுவதற்கு முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள், 1990 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளினால் முஸ்லிம்கள் வடக்கிலிருந்து முற்றாக வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் மக்களுடனான சமூக உறவில் ஏற்பட்ட ஆழமான விரிசல், அந்த விரிசலுக்கு சுய அரசியல் இலாபத்தைக் கருத்திற்கொண்டு பின்பற்றப்பட்ட அரசியல் கொள்கைகள் மற்றும் அவை சார்ந்த முரண்பாடான செயற்பாடுகள் என்பனவும் வாய்ப்பாக அமைந்திருந்தன.
யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர், உள்நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மத, இனவாத தாக்குதல்கள், வன்முறைகள் என்பனவற்றினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் அக நிலையில் ஆதரவு தேடி அலைக்கழிந்தபோது, அல்கைடா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற அனைத்துலக முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புக்களின் முஸ்லிம்களுடைய வாழ்வியல் இருப்புக்கான போராட்டங்கள் ஓர் ஆதரவுத்தளமாகத் தெரிந்தது. இது மிதவாத முஸ்லிம்களிலும் பார்க்க, முஸ்லிம் இளைய சமூகத்தினர் மத்தியிலேயே அதிக செல்வாக்கைப் பிரயோகித்திருந்தது எனலாம்.
இணையம் வழியிலான பல்வேறு தொடர்பாடல் கட்டமைப்புக்களின் ஊடாக ஆட்களை அணிதிரட்டுகின்ற அந்த அமைப்புக்களின் நவீன சக்தி வாய்ந்த பிரசார வெளியீடுகள் இந்த இளைஞர்களை இலகுவாகவும், மிகவும் இரகசியமாகவும் சென்றடைந்தன.
ஈரானிலும், சிரியாவிலும் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற தாக்குதல்களின் கோரக் காட்சிகள் அடங்கிய காணொளிகளும், அந்த அவலங்களுக்கு எதிரான கசப்பான மன உணர்வுகளின் வெளிப்பாடுகளும், அவற்றை ஆதாரமாகக் கொண்டு, முஸ்லிம்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் வெளியிடப்பட்ட பிரசார குரல் நறுக்குகள், காணொளி நறுக்குகள் மற்றும் எழுத்து வடிவங்கள் என்பன உள்ளூரில் பாதிக்கப்பட்டு மனம் நொந்திருந்த இளம் உள்ளங்களுக்கு உத்வேகம் அளிப்பதாகவும், அந்த அடிப்படைவாத அமைப்புக்களுடன் இணைந்து தமது சமூகத்திற்காகப் போராட வேண்டும் என்ற மன உந்துதலையும் ஏற்படுத்தின.
இந்த மன உந்துதல்கள், உண்மையான இஸ்லாமிய மதக் கோட்பாடுகளின் அடிப்படையிலான வழிமுறைகளைக் கைவிட்டு, அனைத்துலக செல்வாக்கு பெற்றுள்ள அமைப்புக்களுடன் கைகோர்க்க வேண்டும் என்ற வேட்கையை அந்த இளம் உள்ளங்களில் ஏற்படுத்தியிருந்தன. இந்த உணர்வு கிட்டத்தட்ட ஒரு மதவெறி உணர்வாகவே ஊட்டப்பட்டு வளர்க்கப்பட்டு, அடிப்படைவாதிகள் தவிர்ந்த ஏனையோர் அனைவரும் எதிரிகள், கொல்லப்பட வேண்டியவர்கள் என்ற கடும் நிலைப்பாடுக்குத் தள்ளிச் சென்றது எனலாம்.
இத்தகைய ஒரு பின்னணியிலேயே முஸ்லிம்களில் ஒருசில குடும்பங்களும், ஒரு சில இளைஞர்களுமாகிய சிறிய அளவிலானவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் பிடியில் சிக்கி, உள்நாட்டில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை நடத்தும் அளவுக்கு தீவிரவாதிகளாக மாறிப் போயினர்.
நல்லெண்ண நடவடிக்கைகள்
இஸ்லாமிய அடிப்படை பயங்கரவாதத்தின் பெரும்பகுதி கட்டுப்பாட்டினுள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது. அதேநேரம், அந்த பயங்கரவாதத்துடன் தொடர்புடைய பலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும், அவர்கள் வசமிருந்த பல்வேறு வகைகளிலான ஆயுதங்கள், தாக்குதலுக்கான தளபாடங்கள் என்பன கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் நாட்டின் பொது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் இராணுவம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் அச்சமின்றி தமது நாளாந்த வாழ்க்கைச் செயற்பாடுகளில் ஈடுபட முடியும். பெற்றோர் தமது பிள்ளைகளை அச்சமின்றி பாடசாலைகளுக்கு அனுப்ப முடியும். இதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்று இராணுவத் தளபதி உறுதியளித்திருக்கின்றார்.
இந்த நிலையில் பல்வேறு தரப்பினரின் சந்தேகப் பார்வைக்கு ஆளாகி, மன சங்கடத்திற்கு ஆளாகியுள்ள முஸ்லிம் சமூகம், இஸ்லாமிய அடிப்படை வாதத்திற்கு இடமளிக்கப்போவதில்லை. அந்தத் தீவிரவாதிகளுக்குத் தாங்கள் இடமளிக்கப் போவதில்லை என உறுதியளித்துள்ளது. அத்துடன் அத்தகைய தீவிரவாதிகள் பற்றியும், அவர்களுடைய மறைவிடங்கள் மற்றும் ஆயுதத் தளபாடங்கள் என்பன பற்றியும் பாதுகாப்புப் படையினருக்கும், பொலிஸாருக்கும் தகவல் தெரிவித்து, அவர்களின் தேடுதல் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாகச் செயற்பட்டு வருகின்றார்கள்.
அதேவேளை இஸ்லாமிய அடிப்படைவாதம் தலையெடுப்பதற்குக் காரணமான நிலைப்பாடுகளிலும், செயற்பாடுகளிலும் மாற்றங்களைக் கொண்டு வருவதற்குத் தாங்கள் தயாராக இருப்பதாகவும் முஸ்லிம் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர். பாதுகப்புப் பிரிவினருக்கான ஒத்துழைப்பும், அது சார்ந்த செயற்பாடுகளும் உலக பயங்கரவாதத்தை இல்லாமல் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.
அது மட்டுமல்லாமல், தங்கள் தரப்பில் ஒரு சிறிய குழுவினர் அல்லது ஒரு சிறிய பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களினால் ஏற்பட்ட நிலைமைகளுக்குப் பரிகாரமாகவும் தமது நல்லெண்ணத்தையும் மற்றும் தாங்கள் இலங்கையர்கள் என்ற உணர்வுபூர்வமான நிலைப்பாட்டையும் வெளிப்படுத்துவதற்காக சில நடவடிக்கைகளையும் முஸ்லிம் சமூகத்தினர் மேற்கொண்டுள்ளார்கள்.
குறிப்பாக வெசாக் தினத்தன்று முஸ்லிம் பெண்கள் சிலர் விகாரைகளில் வழிபடுவதற்காக, பௌத்த முறைப்படி கைகளில் தாமரைப் பூக்களை ஏந்திச் சென்றிருக்கின்றார்கள். அதேபோன்று தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் நடைபெற்று ஒரு மாதம் பூர்த்தியடைந்துள்ளதையடுத்து, அந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் ஆத்ம சாந்திக்காக பல்வேறு பள்ளிவாசல்களிலும் துஆப் பிரார்த்தனைகளும், அஞ்சலி நிகழ்வுகளும் நடத்தப்பட்டிருக்கின்றன. இந்த நடவடிக்கைகள் தற்கொலை குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து முஸ்லிம்களை சந்தேகத்துடனும், பகை உணர்வுடனும் நோக்குகின்ற பல்வேறு தரப்பினருடைய மன நிலைகளை மாற்றுவதற்கும், முஸ்லிம்கள் இதயமுள்ளவர்கள், இரக்கமற்றவர்களல்ல. அவர்கள் ஏனைய சமூகத்தினருடன் இணைந்து இசைந்து வாழவே விரும்புகின்றார்கள் என்ற நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
குறிப்பாக உள்ளூர் பயங்கரவாதத்தின் எழுச்சிக்கு முஸ்லிம்களில் ஒரு சிறுபகுதியினரே காரணம். அவர்கள் பிழையாக வழிநடத்தப்பட்டதன் காரணமாகவே உயிர்த்த ஞாயிறு தினத்தில் அனர்த்தங்கள் ஏற்பட்டன. அந்த உள்ளூர் பயங்கரவாதத்துக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை. அதற்குத் தாங்கள் இடமளிக்கப்போவதில்லை என்பதை வெளிப்படுத்துவதாகவும் முஸ்லிம்களின் இந்த நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன.
எது எப்படியாயினும், உள்ளூர் பயங்கர வாதம் முழுமையாகக் களையப்படும் வரை யில் 30 வருட மோசமான யுத்தம் ஒன்றுக்கு முகம் கொடுத்த பின்னர் மோசமான உலக பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகி அச்சத்தில் உறைந்துள்ள நாட்டில் நிரந்தரமான அமைதியும் சமாதானமும் உருவாகுவது முயற்கொம்பாகவே இருக்கும்.
பி.மாணிக்கவாசகம்