எனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் -ஸ்ரீதரன்

510 0

எனது வீட்டில் இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த எனது குடும்பத்தினரை மிரட்டி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் எனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற செயல் நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் சட்டத்தின் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே   இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கடந்த 18 ஆம் திகதி சனிக்கிழமை நான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றிருந்தபோது யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியிலுள்ள எனது வீட்டிற்குள் 4 இராணுவ வீரர்களும் ஒரு பொலிஸாரும் அத்துமீறி நுழைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபடமுயன்றுள்ளனர்.

அப்போது எனது மனைவி இது பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் வீடு எனக்கூறியபோது எனது மனைவியையும் பிள்ளைகளையும் அச்சுறுத்திவிட்டு வீட்டில்  சல்லடை போட்டு தேடியுள்ளனர்.

புத்தக அலுமாரியில், உடுபுடைவைகள் வைக்கும் அலுமாரியில் எல்லாம் கிளறி  சோதனையிட்ட அவர்கள், புலிகளின் சஞ்சிகைகள் ,புத்தகங்கள் இருக்கின்றனவா என்பதை கண்டுபிடிப்பதே அவர்களின் நோக்கமாக இருந்துள்ளது.

ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.மகனின் பாடசாலை புத்தக அலுமாரி கூட படையினரால் கிளறியெறியப்பட்டது.

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தற்கொலைக்குண்டுத்தாக்குதல்களின் பின்னர் இடம்பெறும் சோதனை நடவடிக்கைகளில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளிலும் எந்தவித சோதனை நடவடிக்கைகளும் நடத்தப்படாத நிலையில்,இத்தாக்குதல் சம்பவங்களுடன் குற்றம் சாட்டப்படும் அமைச்சர்கள், ஆளுநர்களிடம் கூட எந்தவித விசாரணைகளும் நடத்தப்படாத நிலையில்  எனது வீட்டில் மட்டும் சோதனை நடத்தப்பட்டது ஏன்?

இச் சோதனை நடவடிக்கையின் மூலம் எனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எனவே இவ்விடயத்தில் எனக்கு நீதி கிடைக்க வேண்டும் .எனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவது இது முதல் முறையல்ல .அதனால் எனக்கு ஏற்பட்ட அநீதிக்கு நீதியை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.