நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்

309 0

201610160916041781_country-according-to-the-population-to-increase-the-number_secvpfநாட்டில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப நீதிபதிகளின் எண்ணிக்கை இல்லை என்றும் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவேன் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் கூறினார்.சென்னை அடையாறில் உள்ள தமிழ்நாடு ஜூடிசியல் அகடாமியில், சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பணியாற்றும் நீதிபதிகளுக்கு சமரச தீர்வு மையம் குறித்து விழிப்புணர்வு பயிற்சி நேற்று நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.ஜெயசந்திரன், எஸ்.மணிகுமார், எம்.எம்.சுந்தரேஷ், பி.ராஜேந்திரன், எஸ்.வைத்தியநாதன், புஷ்பா சத்தியநாராயணா உள்ளிட்ட ஐகோர்ட்டு நீதிபதிகளும், பெண் வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் நளினி, செயலாளர் ரேவதி உள்ளிட்ட வக்கீல் சங்கங்களின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், தேசிய சட்டப்பணி ஆணைக்குழுவின் திட்டங்கள் மற்றும் விதிமுறைகள் என்ற தலைப்பில் தமிழில் எழுதப்பட்ட புத்தகத்தை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

பொதுவாக அதிக அளவில் வழக்குகள் தேங்கி கிடக்கிறது என்று தான் நீதித்துறை மீது பிறர் குற்றம் சுமத்துவார்கள். எனவே, தேங்கி கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க சமரச தீர்வு மையங்களை நீதிபதிகள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். சமரச தீர்வு மையம் நாட்டிலேயே முதல் முறையாக சென்னை ஐகோர்ட்டில் தான் தொடங்கப்பட்டது. மூத்த வக்கீல் ஸ்ரீராம்பஞ்சு, அப்போதைய தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜூ ஆகியோர் இந்த மையத்தை தொடங்கினார்கள்.

இந்த சமரச தீர்வு முறையை, டெல்லி ஐகோர்ட்டிலும் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ அமல்படுத்தினார்.

இந்தியாவில் தமிழகம், கர்நாடகம், மராட்டியம் உள்ளிட்ட 8 மாநிலங்களில்தான் அதிக அளவு வழக்குகள் தேங்கி கிடக்கின்றன. வடகிழக்கு மாநிலங்களில் இந்த நிலை இல்லை. இதற்குகாரணம், இந்த 8 மாநிலங்களிலும் மக்கள் தொகை அதிகம் என்பது தான். அதனால் அதிக அளவில் வழக்குகள் தாக்கலாகுகிறது.

மக்கள் தொகைக்கு ஏற்ப போதுமான எண்ணிக்கையில் நீதிபதிகள் இல்லை. 1987-ம் ஆண்டு சட்ட கமிஷன் நாட்டில் 40 ஆயிரம் நீதிபதிகள் தேவை என்று அறிக்கை கொடுத்தது. ஆனால், இப்போது 18 ஆயிரம் நீதிபதிகள் தான் உள்ளனர். எனவே, நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளேன்.

மக்கள் தொகைக்கு ஏற்ப நீதிபதிகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்கவேண்டும். அதேநேரம் சமரச மையங்களுக்கு அனுப்பவேண்டிய வழக்குகளை நீதிபதிகள் தெளிவாக கண்டறிந்து தேர்வு செய்யவேண்டும். அந்த வழக்குகளை எல்லாம் முழுமையாக விசாரித்த நேரத்தை வீண் செய்யக்கூடாது.

சமரசம் ஏற்படக்கூடிய வழக்குகளை சமரச மையங்களுக்கு அனுப்புவதன் மூலம், அந்த வேலைபளு குறைகிறது. அந்த வழக்குகள் சமரசம் ஏற்பட்டுவிட்டால், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது. இதனால் தாக்கலாகும் மேல்முறையீட்டு வழக்குகளின் எண்ணிக்கையும் குறையும். எனவே, சமரச மையத்தை நீதிபதிகள் நன்றாக பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

சென்னை மற்றும் கேரளா ஐகோர்ட்டுகளில் திறமையான நீதிபதிகள், வக்கீல்கள் உள்ளனர். இந்த இரு ஐகோர்ட்டுகளிலும் பிறப்பிக்கப்படும் தீர்ப்புகள், நாடு முழுவதும் உள்ள நீதிபதிகள், வக்கீல்கள் ஆர்வத்துடன் படிக்கின்றனர். இந்து வாரிசுரிமை வழக்குகள் தொடர்பாக பிறப்பிக்கும் தீர்ப்புகள் மிகவும் நுணுக்கமாக இருக்கும். ஐகோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், 10 ஆயிரம் வழக்குகளுக்கு மேல் தீர்ப்பு வழங்கியிருப்பதாக அறிக்கையை பார்த்தேன். அவருக்கு என்னுடைய பாராட்டுகள்.
இவ்வாறு அவர் பேசினார்.