புறங்காட்டாப் போர்முனையின் நடுகல் முள்ளிவாய்க்கால்!

552 0

புறமுதுகுகாட்டி ஓடாது, சங்க காலம் போன்று போர்முனையில் நேருக்கு நேர் நின்று போராடி  உயிர் கொடுத்த போராளிகளையும், அப்பாவிப் பொதுமக்களையும் கொன்று குவித்தவர்கள் படுகோழைகள். இவர்களை இயக்கிய சிங்கள அரசும் அவ்வாறானதே. யுத்தம் மௌனிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழரின் குருசேத்திரம். புறமுதுகு காட்டாத போர்முனையின் நடுகல்லாக விளங்குகிறது முள்ளிவாய்க்கால்.

பத்தாண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற எழுத்தில் வடிக்க முடியாத, ஒவ்வொரு ஆன்மாவையும் உலுக்கியெடுத்த, திட்டமிட்ட கோரக் கொலைகளை நினைத்துப் பார்க்கும் நாட்களில் இதனை எழுத வேண்டியுள்ளது.

மண்ணையும் மக்களையும் காப்பதற்கு ஓரினம் போராட நேர்ந்த வேளையில், அரச பயங்கரவாதத்தையும் எதிர்த்துப் போராட வேண்டியிருந்ததால், விடுதலை வேட்கை கொண்ட இனம் ஆயுதம் ஏந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டது தவிர்க்க முடியாதது.

இனவாதமும் பயங்கரவாதமும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேளையில், அப்பாவிப் பொதுமக்களுக்கும், அவர்களின் காவலர்களுக்கும் என்ன நடைபெறும் என்பதற்கு முள்ளிவாய்க்கால் நிலையான சாட்சி.

முள்ளிவாய்க்காலில் யுத்தம் மௌனிக்கப்பட்டதென்கின்றனர் சிலர். முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டன என்கின்றனர் வேறு சிலர். மௌனம் என்பது பலமான ஒரு மொழி என்பது உண்மையானால், முள்ளிவாய்க்கால் மௌனம் என்பது விடுதலைப் போராட்டத்தின் முடிவல்ல என்பதை ஒவ்வொருவரும் ஒப்புக்கொள்வர்.

தனது இனத்தின் இருப்புக்காக தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை வேண்டிப் போராடிய ஆயிரமாயிரம் போராளிகளும், அவர்களுக்குப் பலமாகவும் அரணாகவும் நின்று சர்வதேசத்திடம் நீதி கேட்ட பொதுமக்களும், சாட்சியமில்லாத யுத்தத்தில் வகைதொகையின்றி இளையோர் – முதியோர் – சிறுவர் – பாலகர் என்ற பேதமின்றி ஏன் கொல்லப்பட்டனர் என்பதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.

பத்தாண்டுக்கு முன்னைய அந்தப் பேரழிவின் சூத்திரதாரிகள் சர்வதேசத்துக்கு பொறுப்புக் கூற மறுக்கிறார்கள். அனைத்துலக ஆதரவுடனான கலப்பு நீதி விசாரணையை ஒப்புக் கொண்டுவிட்டு அதனையும் மறுக்கிறார்கள்.

நடந்தவைகளை மறப்போம், நல்லிணக்கத்தோடு வாழ்வோம் என்று எலிக்குப் பூனை கதை சொல்வதுபோல ஏமாற்று நாடகம் நடைபெறுகிறது.

யுத்தம் மௌனிக்கப்பட்ட வேளையில் கொல்லப்பட்டவர்கள், விசாரணைக்கென கொண்டு செல்லப்பட்டவர்கள், காணாமலாக்கப்பட்டவர்கள், சிறையில் அடைக்கப்பட்டவர்கள் பற்றிய எண்ணிக்கையைக்கூட சொல்ல மறுத்து வருகிறது சிங்கள பௌத்த ஏகாதிபத்திய அரசு.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிலிருந்து இன்றைய மைத்திரிபால சிறிசேன வரை ஒரு கொள்கை சிங்கள தேசத்தால் நேர்த்தியாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

சிங்களவர் ஆளும் இனம், தமிழர் ஆளப்படும் இனம் என்பதுவே அந்தக் கொள்கை. (அன்று சிங்கள அரசுகளுடன் இணைந்து தமிழரை அழித்தொழிப்பதில் ஈடுபட்ட முஸ்லிம்களும் இப்போது ஆளப்படும் இனமாக மாற்றப்பட்டுள்ளதை ஒரு தசாப்தத்துக்குள் காண நேர்ந்துள்ளது)

2009ல் முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சத்து நாற்பதினாயிரத்துக்கும் அதிகமானவர்கள் காணாமல் போனார்கள் என்று புள்ளிவிபரத்தோடு கணக்கு காட்டிய அப்போதைய மன்னார் ஆயர், அதனை ஒரு சாட்சியமாக ஐக்கிய நாடுகள் அவைக்கும் சமர்ப்பித்தார்.

அவரை ஒரு பொய்யராகச் சித்தரித்த சிங்களப் பேரினவாதம், பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லையென்று மறுத்து வருகிறது. இந்த நிலையில் இவர்களிடமிருந்து எவ்வாறு பொறுப்புக்கூறலை எதிர்;பார்க்க முடியும்?

கடந்த பத்தாண்டுகளும் தாயகத் தமிழர் மேய்ப்பரில்லாத இனக்குழுமமாக வாழ்ந்து வருகின்றனர் என்பது கண்கூடு.

தமிழர் தாயகமெங்கும் சிங்கள் இராணுவம் வியாபித்திருக்கிறது. தமிழ் மண்ணைப் பொறுத்தளவில் இது நில ஆக்கிரமிப்புப் படையாகியுள்ளது. இலங்கை இராணுவத்தின் மொத்த எண்ணிக்கையில் எழுபது வீதமானவர்கள் தமிழ் மண்ணில் தங்கியுள்ளனர்.

கமத்தொழிலும் கடற்றொழிலும் இவர்கள் வசமாகியுள்ளன. தங்களுக்கு உறுதுணையாக சிங்களக் குடும்பங்களை இராணுவ முகாம்களுக்கருகில் குடியேற்றியுள்ளனர். தமிழ் மண்ணில் விவசாயம் செய்து உற்பத்திப் பொருட்களை தமிழர்களுக்கே விற்று பணம் சேர்க்கும் வியாபாரம் வேறு.

புதுக்குடியிருப்பில் மட்டும் 400க்கும் அதிகமான சிங்களக் குடும்பங்கள் இப்போது வசித்து வருவதாக அங்கு சென்றிருந்த கொழும்புப் பத்திரிகையாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை தெற்குடன் இணைக்கும் ஏ-9 நெடும்பாதையில் கிளிநொச்சிக்கும் வவுனியாவுக்குமிடையில் சுமார் நான்காயிரத்துக்கும் அதிகமான சிங்களக் குடும்பங்கள் கடந்த ஒரு தசாப்தத்தில் குடியேற்றப்பட்டுள்ளனர். இவர்களில் அநேகமானவர்கள் சிறைவாசம் அனுபவித்த பாரிய குற்றவாளிகள்.

அண்மையில் நீர்கொழும்பில் இடம்பெற்ற தாக்குதல்களின்போது தப்பிய பெருமளவான பாகிஸ்தானிய குடும்பங்களை வவுனியாவில் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுவும் தமிழ்மண் அபகரிப்பின் ஓர் அங்கமே.

முல்லைத்தீவில் கொக்கிளாய் முகத்துவாரத்துக்கருகில் தமிழருக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் காணியை சிங்களவர் குடியேற்றத்துக்கு வழங்க வவுனியாவின் அரசாங்க அதிபரான சிங்களவர் நடவடிக்கை எடுத்து வருவதை வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் எதிர்த்துள்ளனர்.

மன்னார் ஓலைத்தொடுவாய் உவரி பகுதியில் சுமார் 508 ஏக்கர் காணியை கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாவுக்குச் சொந்தமான தனியார் நிறுவனமொன்று எடுத்துக் கொண்டதை மன்னாரின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

யுத்த காலத்தில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்த தமிழர்களுக்குச் சொந்தமான காணிகள் அடாத்தாக பறிக்கப்பட்டுள்ள சம்பவங்களில் இதுவுமொன்று. இலங்கையில் ஏப்ரலில் நடைபெற்ற கிறிஸ்தவ தேவாலயங்களின் தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது இங்கு குறிப்பிடப்பட வேண்டியது.

முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் திருகோணமலை மாவட்டத்துக்குமிடையில் எல்லைப்புறங்களிலுள்ள மணலாறு, நாயாறு, டொலர்பாம், கென்பாம், கொக்குத்தொடுவாய், தென்னைமரவாடி, குச்சவெளி ஆகிய தூய தமிழ்க் கிரமாங்களில் பல்லாயிரம் சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன.

1958ல் ஆரம்பமான இனரீதியான தாக்குதல், தமிழர் சொத்தழிப்பு என்பவை சிங்கள அரசாங்கங்களின் அனுசரணையுடன் இன வன்முறை, இனப்படுகொலை என விரிந்து முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பானது. எம் கண்முன்னால் இடம்பெற்ற கொடூர வரலாறு.

இதற்கு நீதி கேட்டு உலகின் மூலைமுடுக்குகளிலும், சந்திகள் சந்தைகளிலும் தமிழர்கள் முழங்காலிட்டு கரங்கூப்பி ஓலமிட்டுக் கதறி அழுதும், வீதிகளை மறித்தும் இதுவரை நீதி கிடைக்கவில்லை, எந்த நியாயமும் கிடைக்கவில்லை.

கொலைகாரர்களே விசாரணையாளர்களாகவும், நீதி வழங்குபவர்களாகவும் மாறியுள்ள கலிகாலம் இது. தமிழர் தரப்பிலுள்ள சிலர் இதற்குத் துணை போவதை என்னென்று சொல்வது?

வடமாகாணசபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இலங்கையிலே இடம்பெற்றது தமிழினப் படுகொலை என்று ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்து துணிச்சலாக நிறைவேற்றினார்.

இது தவறான முன்னெடுப்பென்று சட்டவாதங்களை முன்வைத்து முதல் குரல் கொடுத்தவர் சிங்களவரல்ல, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனே.

புலம்பெயர் மண்ணில் மார்க்கம் நகரசபையும், பிராம்ரன் நகரசபையும் தமிழினப்;படுகொலையை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளன. ரொறன்ரோ நகர முதல்வர் ஜோன் ரோறி இவ்வருடம் தமிழினப்படுகொலையை பிரகடனம் செய்துள்ளார்.

ஒன்ராறியோ சட்டசபையில் றூஜ்பார்க் தொகுதி உறுப்பினர் விஜே தணிகாசலம் முன்மொழிந்த தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரம் என்னும் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இம்மாதம் 16ஆம் திகதி எதிர்ப்பேதுமின்றி சகல கட்சிகளினதும் ஆதரவோடு நிறைவேறியுள்ளமை ஒரு வரலாற்று நிகழ்வு. மூன்றாம் வாசிப்பில் இது நிறைவேறுமாயின் சட்டமாகும். இதற்கான பல பின்னணிச் செயற்பாடுகளை இங்குள்ள தமிழ்ச் சமூகம் ஒன்றிணைந்து செயற்படுத்த வேண்டும்.

என்ன காரணமோ தெரியாது கனடிய மத்திய அரசு இதுவரை இதுபற்றி எந்த முடிவுக்கும் வருவதாகத் தெரியவில்லை. கனடியத் தமிழர் சமூகம் ஒட்டாவா நாடாளுமன்ற வளாகத்தில் இந்த மாதம் முள்ளிவாய்க்கால் நினைவையொட்டிய இரண்டு நிகழ்வுகளை நடத்தியது.

ஆனால், இனஅழிப்பு என்ற வார்த்தைப் பிரயோகத்தை இவர்கள் தவிர்த்து விட்டதாக சமூகச் செயற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்தனர். ஒரு நிகழ்வில் தமிழ் மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட  அட்டூழியம் என்று குறிப்பிடப்பட்டதை சிலர் சுட்டியுள்ளனர்.

இனப்படுகொலையையும் இனசங்காரத்தையும் இனம் மீதான அட்டூழியம் என்று குறிப்பிடுவது பெரும் தவறு. இதனை சம்பந்தப்பட்டவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

புறமுதுகுகாட்டி ஓடாது, சங்க காலம் போன்று போர்முனையில் நேருக்கு நேர் நின்று போராடி  உயிர் கொடுத்த போராளிகளையும், அப்பாவிப் பொதுமக்களையும் கொன்று குவித்தவர்கள் படுகோழைகள். இவர்களை இயக்கிய சிங்கள அரசும் அவ்வாறானதே.

யுத்தம் மௌனிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழரின் குருசேத்திரம்.

புறமுதுகுகாட்டாப் போர்முனையின் நடுகல்லாக விளங்குகிறது முள்ளிவாய்க்கால்.

பனங்காட்டான்