சிரியாவில் 5 வருடங்களுக்கும் மேலாக நடந்து வரும் போருக்கு தூதரக அளவிலான தீர்வு காண்பதற்காக அமெரிக்கா தலைமையில் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் சுவிட்சர்லாந்தின் லாசேன் நகரில் இன்று பேச்சுவார்த்தை தொடங்கியது.
சிரியாவில் அதிபர் ஆசாத் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக வன்முறையாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கலவரத்தில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த ராணுவத்தினை அரசு பயன்படுத்தி வருகிறது. இதில் லட்சக்கணக்கான பொது மக்கள் உயிரிழந்துள்ளனர்.
சிரியா அரசுடன் வேறு சில நாடுகளும் இணைந்து போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் சிரியாவில் போரினை முடிவுக்கு கொண்டு வர தூதரக அளவிலான தீர்வு காண்பதற்காக இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ஜான் கெர்ரி மற்றும் ரஷ்ய வெளியுறவு துறை மந்திரி செர்கெய் லாவ்ரோவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவர்களுடன் ஜோர்டான், துருக்கி, கத்தார், எகிப்து, ஈரான், ஈராக் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு துறை மந்திரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.