நம்பிக்கையில்லா பிரேரணையை காலம் தாழ்த்தாது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீறிஸ் தெரிவித்தார்.
அடிப்படைவாதிகளுக்கு ஆதரவு வழங்கினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்குக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்தரப்பினரால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரேரணைக்கு ஆதரவாக ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களும் கருத்து தெரிவித்துள்ளார்கள். மக்கள் விடுதலை முன்னணியினர் தமது நிலைப்பாடு தொடர்பில் அறிவிக்கவில்லை. மாறாக தோல்வியடைய கூடிய பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
இன்று செவ்வாய்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர் தரப்பினர் சமர்பித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆளும் தரப்பினரும் கூட்டமைப்பினரும் ஆதரவு வழங்குவதை திசைத்திருப்பி விடுவதற்காகவே மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக பிரேரணையை சமர்ப்பித்துள்ளது என்பதை அனைத்து மக்களும் அறிவார்கள். ஆகவே இவ்விரு நம்பிக்கையில்லா பிரேரணைக்கும் எவ்வித தொடர்புகளும் கிடையாது. பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இணைத்துக் கொண்ட நம்பிக்கையில்லா பிரேரணையை முதலில் காலம் தாழ்த்தாது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.