மீண்டுமொரு தாக்குதல் இடம்பெறாதிருக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம் -தயாசிறி

319 0

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று ஒருமாதம் நிறைவடைந்திருக்கின்றது. தாக்குதல் மீண்டும் நாட்டில் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கு நாமனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அந்தவகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாதுகாப்புத்தரப்பினர், மதத்தலைவர்கள், பாதுகாப்புத்துறை குறித்து ஆழமான தெளிவுடைய ஊடகவியலாளர்கள் ஆகியோரை இணைத்து பாதுகாப்புக் கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்திருக்கின்றார்.

ஸ்திரமான நாடொன்றில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதே எமது கட்சியின் தேவையாகும். மாறாக நாட்டின் தளம்பல் நிலையைப் பயன்படுத்தி அரசியலில் ஈடுபடுவதற்கு முயற்சிக்க மாட்டோம் என்று குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுந்திரக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பிலேயே தயாசிறி ஜயசேகர இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் ஒருமாதம் நிறைவடைந்திருக்கின்றது. அத்தாக்குதலில் உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் மீண்டுமொரு முறை எமது அனுதாபங்களைத் தெரிவிக்கின்றோம்.

அதேவேளை தாக்குதல்களின் பின்னர் ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன விரைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் முழுமையாக நிர்மூலம் செய்யப்பட்டிருக்கின்றார்கள். அதன் பின்னர் மீண்டுமொரு தாக்குதல் இடம்பெறாமல் தடுக்க முடிந்தமை பாரியதொரு வெற்றியாகும் என தெரிவித்துள்ளார்.