அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர், அனைத்து பயங்கரவாத அமைப்புகளையும் பாகிஸ்தான் ஒடுக்க வேண்டும் என்று கண்டித்துள்ளார்.அமெரிக்காவின் உலகளாவிய பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் பாகிஸ்தானும் இடம் பெற்றிருக்கிறது. பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிதி உதவியும் அளித்து வருகிறது.
ஆனால் பாகிஸ்தானின் ராணுவ உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ., பயங்கரவாத அமைப்புகளுக்கு மறைமுக ஆதரவு அளித்து வருகிறது.பயங்கரவாத ஒழிப்பில் அனைத்து அமைப்புகள் மீதும் ராணுவம் நடவடிக்கை எடுப்பதில்லை, பாரபட்சம் காட்டுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்தநிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர், வாஷிங்டனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘பாகிஸ்தான் மண்ணில் செயல்பட்டு வருகிற அனைத்து பயங்கரவாத அமைப்புகளையும் சட்டவிரோதமானவை என ஆக்கி, அவற்றை ஒடுக்க வேண்டும் என்று அந்த நாட்டு அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்’ என கூறினார்.
‘பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாதிகளால் ஏற்படுகிற அச்சுறுத்தலுக்கு முடிவு கட்டுவதில் நாங்கள் உதவ விரும்புகிறோம். அதே நேரத்தில் பாகிஸ்தானை புகலிடமாக கருதுகிற பயங்கரவாதிகளை பின்தொடர்ந்து சென்று, பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு’ என அவர் கண்டிப்புடன் கூறினார்.