காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து நாளை ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து நாளை ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது. தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றன.
ரெயில் மறியல் காரணமாக பயணிகளுக்கு எந்த இடையூறும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் ரெயில்வே போலீசாரும், மாநில சட்டம்-ஒழுங்கு போலீசாரும் கவனமுடன் உள்ளனர். இதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு ரெயில் நிலையத்துக்கு வரும் அரசியல் கட்சியினரை நுழைவு வாயிலிலேயே வைத்து கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் அரசியல் கட்சியினரோ, ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு ரெயில் போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்ய திட்டமிட்டுள்ளனர்.
கடந்த முறை வெளியூர்களில் ஒருசில இடங்களில் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் ரெயிலை மறிக்க முடிந்தது.பெரும்பாலான இடங்களில் மறியலுக்கு செல்ல முயன்றவர்கள் ரெயில் நிலையங்களின் அருகிலேயே கைது செய்யப்பட்டு விட்டனர்.
சென்னையில், சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினரால், ரெயில் நிலையத்துக்குள் புகுந்து மறியலில் ஈடுபட முடியவில்லை. அந்த அளவுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த முறையும் அதே போன்று பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். எழும்பூர் சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலுமே பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.