ஜெயலலிதாவுக்கு சிங்கப்பூர் பெண் டாக்டர்கள் சிகிச்சை

321 0

201610161301382279_jayalalithaa-singapore-woman-doctors-treatment_secvpfமுதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூரில் உள்ள பிரபலமான மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் இருந்து 2 பெண் டாக்டர்கள் இன்று மதியம் அப்பல்லோ வருகிறார்கள்.

 முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கடந்த மாதம் 22-ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவதிப்பட்ட அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அன்று இரவே காய்ச்சல் குணப்படுத்தப்பட்டது.

ஆனாலும் சளி தொந்தரவு, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் அவருக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் சிகிச்சையளிக்கப்பட்டது. பிசியோதெரபி டாக்டர்களும் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே, எய்ம்ஸ் மருத்துவமனை நுரையீரல் சிகிச்சை நிபுணர் கில்நானி மயக்க மருத்துவ நிபுணர் அஞ்சன் டிரிக்கா, இதய சிகிச்சை நிபுணர் நிதிஷ் நாயக் ஆகிய டாக்டர்கள் குழுவினரும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதன் பலனாக ஜெயலலிதாவின் உடல்நிலை யில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆஸ்பத் திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

லண்டன் டாக்டரும், எய்ம்ஸ் டாக்டர்களும் தொடர்ந்து 2 நாட்கள் சென்னையில் தங்கி இருந்து ஜெயலலிதாவின் உடல் நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கு ஏற்ப தொடர் சிகிச்சை அளிக்க உள்ளனர்.

இந்த நிலையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூரில் உள்ள பிரபலமான மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் இருந்து 2 பெண் டாக்டர்கள் இன்று மதியம் அப்பல்லோ வருகிறார்கள்.

இருவரும் பிசியோதெரபி அளிப்பதில் உலகப் புகழ் பெற்றவர்கள். ஜெயலலிதாவுக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை பற்றி அறிந்து அடுத்த கட்டமாக செய்ய வேண்டிய பயிற்சிகளை வழங்க உள்ளனர்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கிருமி தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக அவர் சிகிச்சை பெறும் வார்டில் பார்வையாளர்கள் யாரும் இதுவரை அனுமதிக்கப்படவில்லை.

25-வது நாளாக சிகிச்சை பெற்று வரும் முதல்-அமைச்சரின் உடல் நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து அப்பல்லோ மருத்துவமனை அடிக்கடி மருத்துவ அறிக்கை வெளியிட்டு வந்தது.

கடந்த 9-ந்தேதி பிறகு மருத்துவ அறிக்கை எதுவும் வெளியாகவில்லை. இன்று மருத்துவ அறிக்கை வெளியாக வாய்ப்பு உள்ளது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூரண குணம் அடைய வேண்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்களில் அ.தி.மு.க.வினர் இன்று காலை 6.30 மணிக்கு ஒரே நேரத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தினார்கள்.  அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பும் மகளிர் அணியினர் பூஜை நடத்தினார்கள்.