அரசாங்கத்தின் மீது மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ள தற்போதைய சூழ்நிலையில் நாட்டை சரியான பாதையில் நிர்வகிக்கின்ற தலைமைத்துவம் ஒன்றே தற்போதைய தேவையாகும்.
அரசியல்வாதிகளாக இருக்கின்ற சாத்தான்களிலே கோத்தாபய ராஜபக்ஷ ஓரளவு சிறந்த சாத்தான் என்றே கூறவேண்டும். கடந்தகாலத்தில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்புக்களை அவர் சரிவர நிறைவேற்றினார்.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட அவரது செயற்பாடுகள் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்திருந்தன. அத்தகையதொரு தலைமைத்துவமே தற்போதைய தேவையாகும் என்று பூகோள இலங்கையர் ஒன்றியத்தின் தலைவர் சியாமேந்திர விக்கிரமாராச்சி தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களை அடுத்து நாட்டின் பாதுகாப்பு முழுவதும் இராணுவத்தினரின் கைகளிலேயே இருக்கின்றது. தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி மற்றும் பிள்ளையைக் கூட எமது இராணுவம் தான் காப்பாற்றியது.
இராணுவத்தினரை சிங்களவர்கள் என்று பொதுமைப்படுத்துவது தவறாகும். தமிழ், சிங்கள, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைத்து இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவோரும் இராணுவத்தில் பணியாற்றுகின்றனர். அதேபோன்று கடந்த காலத்தில் அவர்கள் தமிழர்களுக்கெதிராகப் போரிடவில்லை. மாறாக பயங்கரவாத இயக்கம் ஒன்றிற்கு எதிராகவே போரிட்டார்கள். எதிரியையும் நண்பனாக நோக்குகின்ற மிகவும் ஒழுக்கமான இராணுவம் எமது நாட்டில் இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.