இந்தியாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் ’பிரிக்ஸ்’ அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் பெருமைக்குரிய புராதாணச் சின்னங்களை உருவாக்கி பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களை கவர்ந்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் உள்நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களை செதுக்கி மக்களின் மனங்களிலும் அந்த பாதிப்பை உண்டாக்கி வருகிறார்.
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இந்த ஆண்டு நடந்த சர்வதேச மணற்சிற்ப போட்டியில் இந்தியாவின் பிரபல மணற்சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் தங்கப் பதக்கத்தை வென்று தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
கோவாவில் தற்போது ’பிரிக்ஸ்’ நாடுகளின் உச்சிமாநாடு நடைபெற்றுவரும் வேளையில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளின் பெருமைக்குரிய புராதாணச் சின்னங்களை மணல் சிற்பங்களாக உருவாக்கி பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களின் கவனத்தையும் இவர் கவர்ந்துள்ளார்.
பிரேசில் நாட்டில் உள்ள மீட்பர் இயேசு சிலை, ரஷியாவில் உள்ள பொஉனித பசில் தேவாலயம், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், சீனப் பெருஞ்சுவர் மற்றும் தென்னாப்பிரிக்க நாட்டின் மிக உயர்ந்த தலைவரான அமரர் நெல்சன் மண்டேலாவின் சிலை ஆகியவற்றை பெனாலிம் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலின் வரவேற்பு மாடத்தில் சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பமாக உருவாக்கியுள்ளார்.
பிரேசில், ரஷியா, சீனா, இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளில் இருந்தும் எடுக்கப்பட்ட சுமார் 50 டன் கடல் மணலை கொண்டு மூன்றுநாளாக உழைத்து இந்த சிற்பங்களை இவர் செய்து முடித்துள்ளார்.
இந்த மணல் சிற்பத்தை நேற்று பிரதமர் நரேந்திர மோடி, பிரேசில் அதிபட் மைக்கேல் டெமெர், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் க்சி ஜின்பிங், தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா ஆகியோர் பார்த்து ரசித்தனர்.
பிரிக்ஸ் மாநாட்டைப் போன்ற ஒரு வரலாற்று சிறப்புவாய்ந்த தருணத்தில் இதைப்போன்ற சிற்பங்களை உருவாக்கியதும், இதை உலகின் முக்கிய தலைவர்கள் பார்த்ததும் எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். இந்த வாய்ப்பின்மூலம் சிற்பக்கலை என்பது அனைத்து நாடுகளையும் ஒன்றிணைக்கும் உன்னதக்கலை என்ற செய்தியை நான் உணர்த்தியுள்ளேன்’ என சுதர்சன் பட்நாயக் பெருமிதத்துடன் கூறினார்.
இதுவரை 50-க்கும் மேற்பட்ட சர்வதேச மணற்சிற்ப போட்டிகளில் கலந்து கொண்டுள்ள சுதர்சன் பட்நாயக் இந்தியாவிற்காக பல விருதுகளை பெற்று தந்துள்ளதும், இந்த சாதனைக்காக இவருக்கு சென்ற 2014-ம் ஆண்டு நாட்டின் 4-வது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை வழங்கி மத்திய அரசு கவுரவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.