கமலுக்கு செல்வாக்கு அதிகரித்து இருக்கிறது – துணைத்தலைவர் மகேந்திரன்

430 0

கோட்சே பற்றிய கருத்துக்கு பின் கமலுக்கு செல்வாக்கு அதிகரித்து இருக்கிறது என்று மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர் மகேந்திரன் கூறி உள்ளார்.மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சுற்றி அகில இந்திய அளவில் சர்ச்சைகளும் பரபரப்புகளும் சூழ்ந்துள்ள நிலையில் அந்த கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் மாலை மலருக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி:- சூலூர் தொகுதியின் இறுதிகட்ட பிரசாரத்துக்கு கமல்ஹாசனுக்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டதே?

பதில்:- எந்த ஒரு தொகுதியிலுமே கடைசி நாள் பிரசாரம் என்றால் முக்கிய தலைவர்கள் வருகையை எதிர்பார்ப்பார்கள். அப்படி கமல் மக்களை சந்திப்பதை தடுக்கும் முயற்சி தான் இது.

கே:- இது சூலூர் தொகுதி மக்கள் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதா?

ப:- சூலூர் தொகுதி மட்டும் அல்ல தமிழ்நாடு முழுக்கவே வரக்கூடிய நாட்களில் மக்களின் மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும். கமல் கூறியது முழுக்க முழுக்க சரித்திர உண்மை என்பது மக்களுக்கு புரியும். இந்த கருத்து சொல்லப்பட்டதே தேசிய ஒற்றுமையை மனதில் வைத்துதான் என்பதும் மக்களுக்கு தெளிவாகத் தெரியும்.

கே:- கமல்ஹாசன் கருத்துக்கு பிரதமரே கண்டனம் தெரிவித்து இருக்கிறாரே?

ப:- பிரதமர் கண்டனம் தெரிவித்ததாக தெரியவில்லை. அவரது கருத்தை மட்டுமே தெரிவித்துள்ளார். அது அவர் ஏற்கனவே ஏப்ரல் 2-ந்தேதி கூறியது. எனவே அது அவரது நிலைப்பாடு தான். காந்தி மரணத்துக்கு காரணம் யார் என்பதில் அவர் மாற்றுக்கருத்து தெரிவிக்கவில்லை.

கே:- அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வன்முறை பேச்சுக்கு பெரிதாக எதிர்ப்பு வரவில்லையே?

ப:- அவர்கள் கட்சியை சேர்ந்தவர்கள் மட்டும்தான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மற்றபடி பல இடங்களில் இருந்தும் அவருக்கு எதிர்ப்புகள் வந்தன. அவர் கட்சியின் உயர்மட்டத்தில் இருப்பவர்களுக்கு அவரை கண்டிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. ஆனால் கண்டிக்கவில்லை. கண்டித்தால் தங்களையே தாக்குவார் என்ற பயமாக இருக்கலாம்.

கே:- பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க.வின் மேல்மட்ட தலைவர்கள் சொல்லி கூட ராஜேந்திர பாலாஜி பேசியிருக்கலாம் என்று யூகங்கள் ஏற்பட்டுள்ளதே?

ப:- இருக்கலாம். அவர்களது தூண்டுதலின் பேரில் பேசி இருக்கலாம்.

கே:- இந்த சர்ச்சையில் மற்ற கட்சியினர் கமலுக்கு எந்த அளவுக்கு ஆதரவாக இருந்தார்கள்?

ப:- வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் தங்களது நியாயமான கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி. தி.மு.க.வினர் கமலை ஆதரிக்காததற்கு அவர்களது அரசியல் நோக்கம் காரணமாகவும் இருக்கலாம்.

கே:- கமல் கருத்து அகில இந்திய அளவில் சர்ச்சையானதன் பின்னணி என்னவாக இருக்கலாம்?

ப:- இதை சர்ச்சை என்று சொல்ல விரும்பவில்லை. விவாதமாக மாறி இருக்கிறது என்று சொல்லலாம். பா.ஜனதா தவிர வேறு எந்த கட்சியினரோ தலைவரோ இந்த கருத்துக்கு வேறுபாடு தெரிவிக்கவில்லையே? கமல் கருத்துக்கு ஆதரவு தான் பெருகி உள்ளது. தி.மு.க போன்ற சிலர் வேண்டுமானால் அரசியலுக்காக ஆதரிக்காமல் இருக்கலாம். கமல் பேசியது தவறு என்று யாரும் சொல்லவில்லையே? பா.ஜனதா மட்டுமே இதை அரசியலாக்குகிறது.

தேசிய ஒருமைப்பாட்டில் நம்பிக்கை கொண்டு எந்த மதத்தில் இருந்தாலும் தீவிரவாதம் தவறுதான் என்று கமல் சொன்ன கருத்தை ஒருமதத்துக்கு எதிரான கருத்தாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.

கே:- இது இந்துக்களுக்கு எதிரியாக கமல்ஹாசனை காட்டும் முயற்சியா?

ப:- ஆமாம். அப்படி ஒரு பொய் பிம்பத்தை உருவாக்க எடுத்த முயற்சி. காரணம் கமல்ஹாசனுக்கு பெருகும் ஆதரவையும் கட்சியின் வளர்ச்சியையும் கண்டு அதன் மீதான பொறாமையால் இப்படி ஒரு பொய் பிம்பத்தை உருவாக்க முயற்சித்தார்கள். அந்த முயற்சி தோல்வி அடைந்துவிட்டது.

கே:- இந்த சர்ச்சைக்கு பிறகு கமலின் நடவடிக்கையில் ஏதேனும் மாற்றம்?

ப:- எதுவும் இல்லை. வழக்கமான பணிகளை செய்துகொண்டு இருக்கிறார்.

கே:- இந்த சர்ச்சைக்கு பிறகு மக்கள் செல்வாக்கு அதிகரித்து இருக்கிறதா? குறைந்துள்ளதா?

ப- அதிகரித்துதான் இருக்கிறது. பா.ஜனதாவின் கூச்சல் என்பது நூற்றில் ஒன்று தான். மீதம் உள்ள 99 சதவீதத்தினர் அமைதியாக இருந்தாலும் கமலுக்கு தான் ஆதரவு. கட்சி அலுவலகத்துக்கு போன் கால்கள், கடிதங்கள் என மக்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். கட்சியை தாண்டி ஆதரவு பெருகுகிறது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை கமலின் கருத்துக்கு ஆதரவுதான் தெரிவிக்கின்றனர்.

கே:- தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பா.ஜனதாவுக்கு ஆதரவாக வந்துள்ளதே? உங்கள் கட்சிக்கு 5 சதவீத வாக்கு கிடைக்கலாம் என்று வருகிறதே?

ப:- கடந்த தேர்தல்களில் இந்த கருத்துக்கணிப்புகள் 10 சதவீதம் கூட பலித்தது இல்லை. இன்னும் 3 நாட்கள் கூட இல்லாத நிலையில் இதை வைத்து பேச வேண்டிய அவசியம் இல்லை. மக்களின் ஆர்வத்தையும் கவனத்தையும் ஈர்க்கும் முயற்சி தான் இந்த கணிப்புகள்.

கே:- உங்கள் தயாரிப்பில் கமல் நடிக்க தேவர் மகன் 2 படம் உருவாக இருப்பதாக செய்தி வந்ததே?

ப:- அது முழுக்க முழுக்க பொய்யான செய்தி. எனக்கும் சினிமாத்துறைக்கும் தொடர்பே கிடையாது. அதை படித்துவிட்டு சிரித்தேன். அப்படி ஒரு எண்ணமே இல்லை’.இவ்வாறு அவர் கூறினார்.