தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையிலும், குடும்ப ஆட்சிக்கு இடம்கொடுக்காத வகையிலுமான அரசாங்கமொன்றையே இலங்கையில் அடுத்ததாக ஸ்தாபிக்க வேண்டுமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே சம்பிக்க ரணவக்க இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
‘‘நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போதும், பொதுத் தேர்தலின்போதும் மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராக செயற்பட முற்பட்டதில்லை.
அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. அன்று மக்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படும். அதுவரை நாம் இந்த அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடமாட்டோம்.
எவ்வாறாயினும், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும், குடும்ப ஆதிக்கத்துக்கு இடமில்லாத வகையிலுமான ஒரு அரசாங்கமொன்றையே நாம் அடுத்ததாக ஸ்தாபிக்க வேண்டும்.
தகுதியில்லாத தலைவரை நாட்டுக்காக தெரிவு செய்துவிடக்கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். இவற்றுக்கான சந்தர்ப்பம் எமக்கு கிடைத்துள்ளது.
நாம் இலங்கை பிரஜைகள் என்ற ரீதியிலேயே செயற்படுகிறோம். எவ்வாறான சவால்கள் வந்தாலும் நாம் அதற்கு முகம் கொடுக்கத் தயாராகவே இருக்கிறோம்” என சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.