வணிகம் மற்றும்கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையானது அரசியல் பழிவாங்கலுக்காக கொண்டுவரப்பட்டது அல்ல. அது தேசிய பாதுகாப்பிற்காகவே கொண்டுவரப்பட்டது.
எனவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி , தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களதும் வாக்குகளுடன் பெரும்பான்மை ஆதரவுடன் அந்த பிரேரணை நிறைவேற்றப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
ரிஷாத்துக்கு எதிராக சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் அரசியல் பழிவாங்கலுக்காக கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், எனவே அதனை வெற்றியடையச் செய்ய முடியாது என்றும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளமை குறித்து தெளிவுபடுத்துகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் தெளிவுபடுத்துகையில்,
அமைச்சர் ரிஷாத் பதியுதீனை அரசியல் ரீதியான பழிவாங்குவதற்கான எந்த தேவையும் எமக்கு கிடையாது. ஆனால் நூற்றுக்கணக்காக அப்பாவி பொது மக்களின் உயிர்களை பழியெடுத்த இஸ்லாம் அடிப்படைவாதிகளின் தற்கொலை குண்டு தாக்குதல்களுக்கும் இவருக்கும் தொடர்பு இருப்பதாக பரவலாகக் கூறப்படுகின்றது. எனினும் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இடைக்கால அரசாங்கம் அமைத்த போது இவர்கள் இணைந்து ஐ.தே.க. வை பாதுகாத்ததனால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை அரசியல் பழிவாங்கல் எனக் கூறி திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.
ஆனால் மனச்சாட்சியுடைய ஐக்கிய தேசிய கட்சியினதும், தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் கத்தோலிக்க உறுப்பினர்கள் இதற்கான பூரண ஆதரவை வழங்குவதாகத் உறுதியளித்துள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இந்த விடயத்தில் ஆழமாக சிந்தித்து சாதகமான தீர்மானத்தை எடுக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட 64 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். அத்தோடு வெளிநாடு சென்றுள்ள சனத் நிஷாந்த, பிரஷன்ன ரணதுங்க மற்றும் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோர் தாமும் இதற்கு ஆதரவளிப்பதாக உத்தியோக பூர்வ கடிதத்தினை சபாநாயகருக்கு அனுப்பிவைத்துள்ளனர். எதிர்வரும் தினங்களில் இதற்கான ஆதரவு அதிகரிக்கும் அதேவேளை மிக இலகுவாக இந்த பிரேரணையை வெற்றியடையச் செய்ய முடியும்.
அரசியல் பழிவாங்கல் தான் எமது நோக்கம் என்று கூறுகின்றவர்கள் நம்பிக்கையில்லா பிரேரணையில் எம்மால் முன்வைக்கப்பட்டுள்ள பத்து குற்றச்சாட்டுக்களை நன்றாக அவதானித்தால் அது தவறான கருத்து என்பது புரியும். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விடுவிக்குமாறு இராணுவ தளபதிக்கு ரிஷாத் பதியுதீன் அழுத்தம் பிரயோகித்ததாக அவர் தெரிவித்திருந்தார். அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூட இராணுவத் தளபதி அதனை உறுதிப்படுத்தியிருந்தார். இதனையே பிரேரணையின் முதலாவது குற்றச்சாட்டாக குறிப்பிட்டிருக்கின்றோம்.
இது போன்று எம்மால் முன்வைக்கப்பட்டுள்ள ஏனைய சகல குற்றச்சாட்டுகளும் ஆதரங்களுடனேயே முன்வைக்கப்பட்டுள்ளன. சபாநாயகர் கருஜயசூரிய ஜனநாயகத்திற்கு மதிப்பளிப்பவர் என்ற ரீதியிலும், குற்றங்களுக்கு துணை போகாதவர் என்ற ரீதியிலும் இந்த விடயத்தில் பக்கசார்பின்றி நடுநிலையாக செயற்பட வேண்டும் என்பதும் எமது கோரிக்கையாகும் என்றார்.