தாக்குதல் கிறிஸ்தவர்களை மாத்திரம் இலக்கு வைத்ததல்ல!

335 0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு இலங்கையில் உள்ள அரசியலமைபும் காரணம் என தென்னிந்திய திருச்சபையின் பேராயர் அதி.வணக்கத்துக்குரிய. கலாநிதி டானியல் செல்வரத்தினம் தியாகராஜா இன்று தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த ஊடக சந்திப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் உள்ள ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது ஊடங்களிற்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு இலங்கையில் உள்ள அரசியலமைப்பும் காரணமாக உள்ளது. ஜனாதிபதி ஒரு கட்சியும், பிரதமர் ஒரு கட்சியுமாக உள்ள நிலையில் இருவருக்கும் இடையில் புரிந்துணர்வு இல்லாமையால் இவ்வாறான தாக்குதல் சம்பவத்திற்கு வலு சேர்த்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

முதலில் இருவருக்கும் இடையில் ஓர் புரிந்துணர்வு ஏற்பட வேண்டும். குறித்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து ஒரு சமூகத்தின் மீது ஒரு பக்கசார்பான குற்றச்சாட்டுகளை முன்வைக்க கூடாது. உண்மையில் குறித்த தாக்குதல் இஸ்லாமிய இனத்தை சேர்ந்தவர்களால் மேற்கொள்ளப்பட்டது.

அதற்காக ஒட்டுமொத்த இஸ்லாமியர்களிற்கும், கிறிஸ்தவர்களிற்கும் இடையிலான மோதலாக பார்க்க முடியாது. இஸ்லாமிய சமூகத்தினர் மீது வன்முறைகளை மேற்கொள்வதும், அவர்களை குற்றவாளிகளாக பார்ப்பதும் பொருத்தமற்றது எனவும் அவர் தெரிவித்தார்.

மூன்று தசாப்த யுத்தம் நிறைவுற்று அமைதியான சூழல் ஏற்பட்டிருந்த நிலையில், அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் இலங்கையை பாதித்துள்ளது. சமாதான சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கை ரூபாவின் பெறுமதியும் வீழ்ச்சி அடைந்துள்ளது. வெளிநாட்டவர் வருகை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புக்கள் இலங்கை பிரஜைகளாக அனைவரையுமே தாக்கத்தை செலுத்துகின்றது.

இந்த நிலையில் பல்லின சமூகத்தவர்களாக நாம் ஒற்றுமையை கட்டியெழுப்ப வேண்டும். இனங்களிற்கிடையிலும், சமயங்களிற்கிடையிலும் நல்லிணக்கப்பாட்டினை கொண்டு வரவேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து மக்களிற்கும் இலங்கை பிரயைகளாக உதவ முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

தாக்குதல் சம்பவம் தொடரப்பில் முடிந்த பின்னர் ஆராய்வதை பார்க்கிலும், மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதவாறு பார்க்க வேண்டும். அயல்நாடான இந்தியா உள்ளிட்ட நாடுகளின் புலனாய்வு தகவல்களை வைத்தாவது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இலங்கையில் இடம்பெற்ற தாக்குதலிற்கு இலங்கை புலனாய்வு பிரிவில் காணப்பட்ட குறைபாடும் காரணம் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே புலனாய்வு தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், அதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இந்த தாக்குதல் ஒரு சமூகத்தை இலக்குவைத்தல்ல. ஜனாதிபதி. பிரதமர் ஆகியோரிற்கிடையிலான புரிந்துணர்வற்ற நிலை, பாதுகாப்பு பிரிவில் காணப்பட்ட குறைபாடுகள் இத்தாக்குதலிற்கு வழிவகுத்துள்ளது. அன்றய தினம் இடம்பெற்ற தாக்குதல் கிறிஸ்தவர்களை மாத்திரம் இலக்கு வைத்ததல்ல. கொலையாளிகள் அதிகளவானோரை கொள்ள வேண்டும் என்பதற்கு அன்றய தினம் இலக்காக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தீவிரவாதம், பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். அதேவேளை இனங்களிற்கிடையில் சமாதானம் வளர்க்கப்பட வேண்டும. சமய தலைவர்கள் மாத்திரமே சமாதானத்தின் அடையாளமாக அறிக்கைகள், கருத்துக்கள் ஊடாக கரு்ததுக்களை பதிவு செய்கின்றனர். ஆனால் குறித்த சமாதானத்தின் அல்லது நல்லிணக்கத்தின் இணக்கப்பாடு அடிமட்டம் வரை செல்ல வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணம் ஒதுக்கப்பட்டு வருகின்றதாகவே காண்கின்றேன். சீயோன் தேவாலய தாக்குதலின் பின்னர் அங்கு உதவிகள், தேவைப்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டதாக காண முடியவில்லை. இந்த தாக்குதல் சம்பவத்தை அறிந்ததும் தென்னிந்திய திருச்சபையில் உள்ள 23 ஆதீனங்களின் பேராயர்களும் எம்முடன் தொடர்புகொண்டு எவ்வாறான உதவிகள் வேண்டும் என கோரியிருந்தனர். அவர்களைக்கொண்டு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவ உள்ளதாகவும் பேராயர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தார்.